18 கிலோ கஞ்சா கடத்தி வந்த வடமாநிலத்தவர் கைது
பல்லடத்தில் 18 கிலோ கஞ்சா கடத்தி வந்த வடமாநிலத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
பல்லடம்
பல்லடத்தில் 18 கிலோ கஞ்சா கடத்தி வந்த வடமாநிலத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-
போதைபொருள் கடத்தல்
திருப்பூர் மாவட்டத்தில் போதைப் பொருட்களான கஞ்சா, பான்பராக், குட்கா போன்றவற்றை முற்றிலுமாக ஒழிக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின்பேரில், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன் மேற்பார்வையில் பல்லடம் பகுதியில் போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பல்லடம்-செட்டிபாளையம் ரோட்டில் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வடமாநில வாலிபர் ஒருவர் வந்தார். அவர் போலீசார் நிற்பதை பார்த்ததும் மோட்டார்சைக்கிளை திருப்பிக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றார்.
வடமாநிலத்தை சேர்ந்தவர் கைது
உடனே போலீசார் அந்த வாலிபரை விரட்டிச்சென்று பிடித்தனர். பின்னர் அவரது மோட்டார் சைக்கிளில் சோதனை நடத்திய போது அதில் 2 கிலோ கஞ்சா, ரொக்கம் ரூ.80 ஆயிரம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் ஒடிசா மாநிலம் சோசோ பகுதியைச் சேர்ந்த கிரிதரிமாஜி (வயது 35) என்பதும், தற்போது அவர் அவினாசி குருந்தன்காடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்தபடி ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி கொண்டு வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவினாசியில் உள்ள அவனது வீட்டிற்கு அவரை அழைத்துச் சென்று அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 16 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அவனிடமிருந்து மொத்தம் 18 கிலோ கஞ்சா, ரொக்கம் ரூ.80ஆயிரம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கஞ்சா கடத்தியவரை விரட்டிப் பிடித்த போலீசாரை பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன் பாராட்டினார்.
Related Tags :
Next Story