புதிய பாலம் கட்டும் பணியை மீண்டும் தொடங்க வேண்டும்
கூடலூர் அருகே புதிய பாலம் கட்டும் பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கூடலூர்,
கூடலூர் தாலுகாவில் உள்ள மரப்பாலம் பகுதியில் இருந்து புளியம்பாரா வழியாக காஞ்சிக்கொல்லிக்கு சாலை செல்கிறது. இதில் புளியம்பாரா பகுதியில் ஆற்று வாய்க்கால் குறுக்கே பாலம் கட்டப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலம் உடைந்தது.
இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் புதிய பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதன் காரணமாக நெல்லியாளம் நகராட்சி மூலம் பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து பல மாதங்களுக்கு முன்பு புதிய பாலம் கட்டுமான பணி தொடங்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு சட்டமன்ற தேர்தல், கொரோனா பரவல், ஊரடங்கு போன்ற காரணங்களால் பணிகள் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் அந்த பாலம் கட்டுமான பணியை விரைவாக தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை இன்னும் தீவிரம் அடையாமல் உள்ளது.
அது தீவிரம் அடைந்து தொடர்ந்து பலத்த மழை பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பாலம் மீண்டும் அடித்து செல்லப்பட வாய்ப்பு உள்ளது. எனவே கட்டுமான பணியை விரைவாக மேற்கொள்ளப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- புளியம்பாராவில் பலத்த மழை வெள்ளத்தால் பாலம் சேதமானது. இதனால் புதிய பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டது. ஆனால் இதுவரை பணிகள் நிறைவு பெறவில்லை.
பழைய பாலம் அகலம் குறைவாக இருந்தது. இது சம்பந்தமாக முறையிட்டதன்பேரில் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர். பின்னர் அகலமாக கட்டுவதாக உறுதியளித்து உள்ளனர். எனவே பணியை விரைவாக மீண்டும் தொடங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story