வணிகர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்க வேண்டும்-விக்கிரமராஜா பேட்டி


வணிகர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்க வேண்டும்-விக்கிரமராஜா பேட்டி
x
தினத்தந்தி 11 July 2021 12:39 AM IST (Updated: 11 July 2021 12:39 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த வணிகர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் அரசு நிதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

நெல்லை:
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த வணிகர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் அரசு நிதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

நிர்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை மண்டல நிர்வாகிகள் கூட்டம் நெல்லை டவுனில் நேற்று நடந்தது. மண்டல தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குணசேகரன், மாநில இணைச் செயலாளர் நயன்சிங், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாநகர செயலாளர் ஸ்டீபன் பிரேம்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மார்க்கெட் கடைகள், வணிக வளாகங்கள் இடிக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. இந்த பணியை விரைந்து முடித்து ஏற்கனவே அங்கு கடை வைத்திருந்த வியாபாரிகளுக்கு கடை வழங்க வேண்டும்.

ரூ.10 லட்சம் நிதி

கொரோனா ஊரடங்கால் நெல்லையில் பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்ட கடைகளை மீண்டும் பழைய இடத்திலேயே வணிகம் செய்ய அனுமதிக்க வேண்டும். மாநகராட்சியில் உள்ள பழுதடைந்த அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் அறநிலையத் துறையில் இயங்கி வரும் வணிக நிறுவனங்களுக்கு 6 மாதம் வாடகை தள்ளுபடி செய்யவேண்டும். கடைகளை இரவு 9 மணி வரை திறந்து வைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஓட்டல்கள் இரவு 10 மணிவரை அனுமதிக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வணிகர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதி அரசு வழங்க வேண்டும். வணிகர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும். இதன்மூலம் வணிகர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும். 
பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனே குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை வேண்டும். இதை கண்டித்து கொரோனா முடிந்தபின் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story