குமரியில் பலத்த காற்றுடன் விடிய, விடிய கனமழை
குமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பேச்சிப்பாறை, சிற்றார்-1 அணைகளில் இருந்து 4,136 கன அடி தண்ணீர் உபரியாக திறந்து விடப்படுகிறது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பேச்சிப்பாறை, சிற்றார்-1 அணைகளில் இருந்து 4,136 கன அடி தண்ணீர் உபரியாக திறந்து விடப்படுகிறது.
கனமழை
வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக குமரி மாவட்டம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழை மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் இருந்து மழை பெய்ய தொடங்கியது. இரவு முழுவதும் விடிய விடிய கன மழையாக பெய்தது. மாவட்டத்தின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவில் நகரிலும் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகள் அனைத்திலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அணைப் பகுதிகள் அனைத்திலும் கனமழை பெய்தது.
11 செ.மீ. பதிவு
இதனால் ஆறுகள், வாய்க்கால்கள் அனைத்திலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. நாகர்கோவில் ஒழுகினசேரி அருகிலுள்ள சபரி அணை, சுசீந்திரம் அருகில் உள்ள சோழன் திட்டை அணை உள்ளிட்ட தடுப்பணைகள் அனைத்திலும் மழை வெள்ளம் மறுகால் பாய்ந்தது.
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை- 69.8, பெருஞ்சாணி- 86.6, புத்தன் அணை- 84.2, சிற்றார் 1-72.6, சிற்றார் 2-48, முக்கடல்- 55, பூதப்பாண்டி- 48.2, களியல் -110, கன்னிமார்- 74.2, கொட்டாரம்- 42.5, குழித்துறை- 104, மயிலாடி-80, நாகர்கோவில்- 68.6, சுருளக்கோடு- 65.4, தக்கலை- 43, குளச்சல்- 18.8, இரணியல்- 10.4, பாலமோர்- 62.4, மாம்பழத்துறையாறு- 72, ஆரல்வாய்மொழி- 15, கோழிப்போர்விளை- 42, அடையாமடை-73, குருந்தன்கோடு- 60, முள்ளங்கினாவிளை- 46, ஆனைகிடங்கு- 73 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
இதில் அதிகபட்சமாக களியல் பகுதியில் 11 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
4,136 கன அடி உபரிநீர்
மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1,466 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 944 கனஅடி தண்ணீரும், சிற்றார்- 1 அணைக்கு 1082 கனஅடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு 45 கன அடி தண்ணீரும் வந்தது.
48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் 45.37 அடியாக இருந்ததால் இந்த அணையில் இருந்து நேற்று பாசனத்திற்காக வினாடிக்கு 497 கனஅடி தண்ணீரும் உபரி நீர் மதகுகள் வழியாக 3,084 கனஅடி தண்ணீர் உபரியாகவும் திறந்து விடப்பட்டது. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் -1 அணையின் நீர்மட்டம் 17 அடியாக இருந்ததால் இந்த அணையில் இருந்து நேற்று 1,052 கனஅடி தண்ணீர் உபரியாக திறந்து விடப்பட்டது. இந்த இரண்டு அணைகளிலும் இருந்து மொத்தம் 4 ஆயிரத்து 136 கனஅடி தண்ணீர் உபரியாக திறந்து விடப்பட்டது.
இதனால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்கனவே ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. நேற்றும் நாகர்கோவில் உள்ளிட்ட குமரி மாவட்ட பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.
மரம் சாய்ந்து விழுந்தது
புதுக்கடை பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் பைங்குளம் சக்திநகர் பகுதியில் சாலையோரம் நின்ற ராட்சத மரம் ஒன்று பெயர்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. நள்ளிரவு நேரத்தில் விழுந்ததால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், மின்கம்பிகள் அறுந்து அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. தகவலறிந்த குழித்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். புதுக்கடை மின்சார வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து சேதமடைந்த மின் கம்பிகளை மாற்றி மின் இணைப்பை சரி செய்தனர்.
சுவர் இடிந்தது
சமத்துவபுரம் பகுதியில் பெய்த கனமழையால் சாலையோரம் தனியார் நிலத்தில் கட்டியிருந்த காம்பவுண்டு சுவர் இடிந்து சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
Related Tags :
Next Story