வீட்டில் கருக்கலைப்பு செய்த பெண் சாவு


வீட்டில் கருக்கலைப்பு செய்த பெண் சாவு
x
தினத்தந்தி 11 July 2021 2:25 AM IST (Updated: 11 July 2021 2:25 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிமடம் அருகே வீட்டில் கருக்கலைப்பு செய்த பெண் பரிதாபமாக இறந்தார்.

வரதராஜன்பேட்டை:

திருமணமாகாமல் கர்ப்பம்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், அந்த மருத்துவமனைக்கு பரிசோதனை செய்ய வந்த கடலூர் மாவட்டம் பெண்ணாடம், கொத்தட்டை கிராமத்தை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில் அந்த பெண், திருமணமாகாத நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி, அந்த கருவை கலைப்பது சம்பந்தமாக அந்த செவிலியரிடம் கேட்டுள்ளார். இதையடுத்து அவர், ஆண்டிமடம் அருகே அன்னங்காரங்குப்பம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் வைத்து கருக்கலைப்பு செய்வதாக கூறியதாக தெரிகிறது.
கருக்கலைப்பு
இதையடுத்து கருக்கலைப்பு செய்வதற்காக அந்த பெண், தனது ஆண் நண்பர் ஒருவருடன் அன்னங்காரங்குப்பம் பகுதிக்கு வந்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த செவிலியர், முறையான டாக்டர் பரிந்துரையின்றி தன்னிச்சையாக அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து நேற்று அந்த பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து ஆண்டிமடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர்‌.
சாவு
அதிக ரத்தப்போக்கு இருந்தநிலையில், உடனிருந்தவர் அந்த பெண்ணை விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அந்த பெண்ணை பரிசோதனை செய்த டாக்டர், அவர் முன்பே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இது குறித்து ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த செவிலியரை போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய ஆண் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story