போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த வாலிபர் கைது


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 July 2021 2:25 AM IST (Updated: 11 July 2021 2:25 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கீழசிந்தாமணி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் ராஜசேகர் (வயது 30). இவர் தா.பழூர் கடைவீதியில் பழக்கடை வைத்துள்ளார். இவருக்கும், அருகில் கடை நடத்தி வரும் மேலசிந்தாமணி கிராமத்தை சேர்ந்த மணி என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்துள்ளது. இதுதொடர்பாக தா.பழூர் போலீசில் ராஜசேகர் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, நேற்று முன்தினம் ராஜசேகர், தனது தாய் சத்தியாவோடு போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவர்களை தடுத்து, பிரச்சினைக்கு கோர்ட்டு மூலம் தீர்வு ஏற்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீஸ்காரர் நிக்கோலஸ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இரவு 11.30 மணி அளவில் தா.பழூர் கடைவீதியில் ராஜசேகர் குடிபோதையில் சுற்றியதாக கூறப்படுகிறது. அவரை வீட்டிற்கு செல்லுமாறு சப்-இன்ஸ்பெக்டர் ரவி கூறியிருக்கிறார். ஆனால் ராஜசேகர் சப்-இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சம்பவ இடத்திற்கு வந்து ராஜசேகரை வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். அவரிடமும் ராஜசேகர் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து போலீஸ்காரர் நிக்கோலஸ் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்து ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜசேகரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Next Story