கர்நாடக மந்திரிசபையை மாற்றி அமைக்க முடிவா?; எடியூரப்பா பதில்


முதல்-மந்திரி எடியூரப்பா.
x
முதல்-மந்திரி எடியூரப்பா.
தினத்தந்தி 11 July 2021 2:32 AM IST (Updated: 11 July 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாளிக்கும் வகையில் கர்நாடக மந்திரிசபையை மாற்றி அமைக்க முடிவா? என்பது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பதிலளித்துள்ளார்.

பெங்களூரு:அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாளிக்கும் வகையில் கர்நாடக மந்திரிசபையை மாற்றி அமைக்க முடிவா? என்பது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பதிலளித்துள்ளார்.

மந்திரிசபையை மாற்றியமைக்க...

கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. 2023-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையொட்டியும், எடியூரப்பாவுக்கு வயதாகி விட்டதாலும், அவரிடம் இருந்து முதல்-மந்திரி பதவியை பறிக்க வேண்டும், அவரது தலைமையை மாற்ற வேண்டும் என்று மந்திரிகள், சில எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா மேலிடத்தை வலியுறுத்தி வருகிறார்கள். 

அதே நேரத்தில் மந்திரி பதவி கிடைக்காமல் ஏராளமான எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய ரமேஷ் ஜார்கிகோளியும் மந்திரி பதவி கேட்டு நெருக்கடி கொடுத்து வருகிறார்.

இதற்கிடையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்திய மந்திரிசபை மாற்றியமைக்கப்பட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதுபோல், 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தல், ஆட்சி நிர்வாகத்தை திறம்பட நடத்துவதற்காக கர்நாடக மந்திரிசபையையும் மாற்றி அமைக்க பா.ஜனதா முடிவு செய்திருப்பதாகவும், அவ்வாறு மாற்றி அமைத்தால் சரியாக செயல்படாத 10 பேரிடம் இருந்து மந்திரி பதவியை பறிக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து கலபுரகியில் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது;-

எனக்கு தகவல் வரவில்லை

“கர்நாடக மந்திரிசபையை மாற்றி அமைப்பது குறித்து பா.ஜனதா மேலிட தலைவா்களிடம் இருந்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை. மந்திரிசபையை மாற்றி அமைப்பது குறித்தோ, மந்திரிசபையை விரிவாக்கம் செய்வது குறித்தோ முடிவு எடுக்கும்படி இதுவரை கட்சி தலைவர்கள் கூறவில்லை. மந்திரிசபையை மாற்றி அமைக்கும்படி கட்சி மேலிடம் எனக்கு அனுமதி அளித்திருந்தால், அதனை மூடி மறைக்க முடியுமா?. உங்களிடம் சொல்லாமல் இருப்பேனா.

சரியான நேரத்தில் பா.ஜனதா மேலிட தலைவர்கள் முடிவு எடுத்து மந்திரிசபை விரிவாக்கம் அல்லது மாற்றியமைப்பது குறித்து தெரிவிப்பார்கள். மந்திரிசபையில் யாரை சேர்த்து கொள்ள வேண்டும் என்பது முதல்-மந்திரியின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும். ஆனால் பா.ஜனதா ஒரு தேசிய கட்சி என்பதால், கட்சியின் மேலிட தலைவர்களின் அனுமதியை பெற வேண்டியது கட்டாயமாகும். மந்திரிசபையை மாற்றியமைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாத பட்சத்தில் 10 பேரிடம் இருந்து பதவி பறிக்கப்படும் விவகாரமே தேவையற்றது.

சண்டை போட வேண்டாம்

முன்னாள் மந்திரி குமாரசாமியும், சுமலதா எம்.பி.யும் தேவையில்லாமல் மோதிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. சண்டை போடவும் வேண்டாம். அவர்களுக்குள் பிரச்சினைகளை பேசி தீர்த்து கொள்ள வேண்டும். குமாரசாமியை பற்றி சுமலதா பேசியதாக இருக்கட்டும், சுமலதா பற்றி குமாரசாமி பேசியதாக இருக்கட்டும், சர்ச்சை ஏற்படுத்தும் விதமாகவோ, தேவையில்லாத வார்த்தைகளை பயன்படுத்தியோ பேச வேண்டாம். ஏனெனில் அவர்களது பேச்சால், 2 பேரின் தொண்டர்கள் தான் ஆவேசம் அடைகிறார்கள். நாம் அனைவரும் சகோதரர்களாக இருக்கலாம்.

மண்டியா மாவட்டத்தின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து, ஒற்றுமையாக பணியாற்றலாம். மண்டியாவில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகளை அரசுடன் கைகோர்த்து பணியாற்றும்படி கேட்டுக் கொள்கிறேன். தேவையில்லாமல் அம்பரீசுக்கு நினைவிடம் அமைப்பது குறித்து யாரும் பேச வேண்டாம். அவர் ஒரு மிகப்பெரிய நடிகர். அம்பரீசுக்கு நினைவிடம் அமைக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.”
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story