அருந்தமிழர் பேரவை நிர்வாகி கொலை வழக்கில் திடீர் திருப்பம்: குடிபோதையில் கட்டையால் அடித்து கொன்ற தொழிலாளி கைது


அருந்தமிழர் பேரவை நிர்வாகி கொலை வழக்கில் திடீர் திருப்பம்: குடிபோதையில் கட்டையால் அடித்து கொன்ற தொழிலாளி கைது
x
தினத்தந்தி 11 July 2021 4:16 AM IST (Updated: 11 July 2021 4:16 AM IST)
t-max-icont-min-icon

அருந்தமிழர் பேரவை நிர்வாகி கொலை வழக்கில் திடீர் திருப்பம்: குடிபோதையில் கட்டையால் அடித்து கொன்ற தொழிலாளி கைது

பள்ளிபாளையம்:
பள்ளிபாளையத்தில் அருந்தமிழர் பேரவை நிர்வாகி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக குடிபோதையில் கட்டையால் அடித்து கொன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
தனிப்படை அமைப்பு 
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கரட்டங்காடு பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 48). அருந்தமிழர் பேரவை மாநில பொதுச்செயலாளரான இவர் கடந்த 5-ந் தேதி அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் கூடுதல் துணை சூப்பிரண்டு சுஜாதா, செல்வம் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் சாந்தமூர்த்தி, குமார், பாஸ்கர் பாபு, ரவி, ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கடந்த 5 நாட்களாக மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். 
இந்தநிலையில் பள்ளிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் சாந்தகுமாரிடம் காவிரி ஆர்.எஸ். பகுதியை சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளியான சின்னத்தம்பி என்ற நீலகண்டன் (29) என்பவர் சரணடைந்தார். அவரிடம் தான் ரவியை கட்டையால் அடித்துக் கொலை செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சாந்தகுமார், சரணடைந்த தொழிலாளி நீலகண்டனை பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். 
கட்டையால் அடித்தேன்
போலீசாரிடம் நீலகண்டன் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- 
தொழிலாளியான நானும், ரவியும் எப்போதும் ஒன்றாக இருப்போம். அதன்படி கடந்த 5-ந் தேதி நள்ளிரவு ரவியும், நானும் மதுகுடித்து விட்டு போதையில் வந்தோம். பின்னர் ரவியின் வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்த போது எனக்கும், ரவிக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. அப்போது குடிபோதையில் இருந்த நான், ஆத்திரமடைந்து அங்கு கிடந்த கட்டையை எடுத்து ரவியின் முகம் மற்றும் தலையில் பயங்கரமாக அடித்தேன். 
இதில் படுகாயம் அடைந்த அவர் அங்கேயே இறந்து விட்டார். இதையடுத்து நான் அங்கிருந்து ஓடி விட்டேன். எனினும் போலீசார் தேடுவதை அறிந்து பயத்தில் இருந்த நான் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்ததாக அவர் தெரிவித்தார். இதையடுத்து நீலகண்டனை கைது செய்த போலீசார் அவரை குமாரபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Story