வால்பாறையில் 3வது நாளாக தொடர் மழை


வால்பாறையில் 3வது நாளாக தொடர் மழை
x
வால்பாறையில் 3வது நாளாக தொடர் மழை
தினத்தந்தி 11 July 2021 7:48 PM IST (Updated: 11 July 2021 7:48 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் 3வது நாளாக தொடர் மழை

வால்பாறை

வால்பாறை பகுதியில் மூன்றாவது நாளாக தொடர்ந்து  மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. இதனால் தொடர்ந்து கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, சோலையார் சுங்கம் ஆறு, வெள்ளமலை ஆறு ஆகிய ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

தொடர்ந்து மழையும் பெய்து கொண்டேயிருக்கிறது. இதனால் சோலையார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் சோலையார் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது.

இது தவிர சோலையார் அணைக்கு நீர்வரத்தை ஏற்படுத்தி தரக்கூடிய சின்னக்கல்லார், நீரார் பகுதியிலும் கனமழை பெய்து வருவதால் தொடர்ந்து சோலையார் அணைக்கு தண்ணீர் வரத்துள்ளது. 

நேற்றுமுன்தினம் சோலையார் அணைக்கு வினாடிக்கு 874 கன அடியாக இருந்த தண்ணீரின் அளவு நேற்று காலை 6 மணி நிலவரப்படி 2779 கன அடியாக உயர்ந்துள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 67 மி.மீ.மழையும், சோலையார் அணையில் 76 மி.மீ.மழையும், சின்னக்கல்லாரில் 102 மி.மீ.மழையும், நீராரில் 60 மி.மீ.மழையும் பெய்துள்ளது. சோலையார் அணையின் நீர்மட்டம் 113 அடியாக உயர்ந்துள்ளது. 

சோலையார் மின் நிலையம் 1 இயக்கப்பட்டு மின் உற்பத்திக்குப் பின் 410 கன அடித் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கும், சோலையார் மின் நிலையம்- 2 இயக்கப்பட்டு 447 கன அடித் தண்ணீர் கேரளாவிற்கும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால் கூழாங்கல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆற்றில் இறங்கி குளிக்கமுடியாமல்  ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.  

கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இனிவரும் நாட்களில் வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கி அத்துமீறி குளிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. 

 ஆகவே இதனை தவிர்க்க  போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Next Story