ராமேசுவரத்துக்கு மேலும் 2 மாதங்களுக்கு ரெயில் போக்குவரத்து ரத்து
பாம்பன் தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் ராமேசுவரத்துக்கு மேலும் 2 மாதங்களுக்கு ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம், மண்டபத்தில் இருந்து ரெயில்கள் இயக்கப்படுகிறது.
ராமேசுவரம்,
பாம்பன் தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் ராமேசுவரத்துக்கு மேலும் 2 மாதங்களுக்கு ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம், மண்டபத்தில் இருந்து ரெயில்கள் இயக்கப்படுகிறது.
பழமையான பாலம்
ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் தூக்குப்பாலம் வழியாக ரெயில்கள் செல்லும்போது ஏதேனும் பாதிப்புகள் மற்றும் அதிர்வுகள் உள்ளதா என்பதை கண்டறிய 84 இடங்களில் சென்சார் கருவிகள் பொருத்தப் பட்டுள்ளன.
கடந்த மாதம் 28-ந்தேதி சென்னையில் இருந்து ராமேசுவரம் வந்த சேது எக்ஸ்பிரஸ் ரெயில் தூக்குப்பாலம் வழியாக வரும்போது சென்சார் கருவி ஒன்றில் இருந்து சத்தம் வந்ததுடன் லேசான அதிர்வும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பாம்பன் பாலத்தில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மேலும் ஐ.ஐ.டி. குழுவினரும் தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தினர். அதைத்தொடர்ந்து வருகிற 14-ந்தேதி வரை பாம்பன் பாலத்தில் ெரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்தது.
ரத்து
இந்த நிலையில் பாம்பன் ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப் பாலத்தில் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட இருப்பதால் வருகிற செப்டம்பர் மாதம் 14-ந் தேதி வரையிலும் பாம்பன் பாலத்தில் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே நேற்று அறிவித்தது.
சென்னை, திருச்சி உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து வரும் அனைத்து ரெயில்களும் மண்டபம் மற்றும் ராமநாதபுரம் ெரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டு செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன பாதிப்பு?
தூக்குப்பாலத்தில் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து இது வரையிலும் ரெயில்வே துறையால் தெரிவிக்கப்படவில்லை. கடலில் நடைபெற்று வரும் புதிய ரெயில் பாலப்பணியால் தூக்கு பாலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா அல்லது 105 ஆண்டுகளை கடந்து விட்டதால் தூக்கு பாலம் அதன் உறுதி தன்மையை இழந்து விட்டதா என்பது குறித்து ரெயில்வே துறை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story