ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு குறுங்காடு அமைத்த மாணவர்கள்


ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு குறுங்காடு அமைத்த மாணவர்கள்
x
தினத்தந்தி 11 July 2021 11:44 PM IST (Updated: 11 July 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு மாணவர்கள் குறுங்காடு அமைத்தனர்.

கீரமங்கலம்:
கீரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கஜா புயலில் மா, பலா, தேக்கு, தென்னை, வேம்பு, சந்தனம், புளி, புங்கன், ஆலமரங்கள் என லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த நிலையில் தான் மரங்கள் சாய்ந்த நிலங்களில் மீண்டும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க தொடங்கியுள்ளனர் விவசாயிகள். புயலில் வீழ்ந்த மரங்களை விட அதிகமான மரங்களை வளர்க்க வேண்டும் என்று ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள இளைஞர்கள் ஏரி, குளங்களின் கரைகள், சாலை ஓரங்கள் என பொது இடங்களில் மரக்கன்றுகளை வைத்து பராமரித்து வளர்த்து வருகின்றனர். 
இதேபோல கீரமங்கலம் அருகில் உள்ள அஞ்சிரங்காடு கிராமத்தில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் சுமார் ஆயிரம் மரக்கன்றுகள் வைத்து வளர்ந்துள்ள நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க மேலும் ஒரு ஏக்கர் பரப்பளவில் குறுங்காடு அமைக்க திட்டமிட்டனர். இதையறிந்த ஒரு தன்னார்வ அமைப்பு ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கியது. ஆயிரம் மரக்கன்றுகளையும் இளைஞர்களுடன் இணைந்து பள்ளி மாணவர்களே நட்டனர். 
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், எங்கள் பள்ளி நிர்வாகி குருகுலம் சிவநேசன் வழிகாட்டுதலில் சுமார் ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்துவிட்டோம். இப்போது மீண்டும் ஆயிரம் பழமரக்கன்றுகள் உள்பட பல வகையான மரக்கன்றுகளை குறுங்காடாக அமைத்திருக்கிறோம். நாங்கள் நட்ட மரக்கன்றுகளை நாங்களே தண்ணீர் ஊற்றி மரங்களாக வளர்த்துவிடுவோம் என்றனர். 

Next Story