குடிபோதையில் மகளை அடித்து துன்புறுத்திய ஆட்டோ டிரைவர் கைது
பெரம்பலூர் அருகே மகளை குடிபோதையில் அடித்து துன்புறுத்திய ஆட்டோ டிரைவரை, வீடியோ அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்:
ஆட்டோ டிரைவர்
பெரம்பலூர் அருகே உள்ள பகுதியில் வசிக்கும் ஷேர் ஆட்டோ டிரைவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அவர் சரியாக வேலைக்கு செல்லாமல், மது குடித்து விட்டு போதையில் குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால் அவருடைய மனைவி கோபித்துக்கொண்டு தனது 9 வயது மூத்த மகளை மாமனார்- மாமியார் பராமரிப்பில் விட்டு விட்டு, இளைய மகளை மட்டும் அழைத்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மனைவி கோபித்துச்சென்ற பிறகும், திருந்தாத ஆட்டோ டிரைவர் மது குடித்துவிட்டு வந்து மீண்டும் வீட்டில் பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டு வந்தாக கூறப்படுகிறது.
அடித்து துன்புறுத்தினார்
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெற்றோர் வீட்டில் இல்லாதபோது குடிபோதையில் இருந்த ஆட்டோ டிரைவர், பெற்ற மகள் என்றும் பாராமல் தனது மூத்த மகளை கண்மூடித்தனமாக கையால் அடித்து துன்புறுத்தினார். மகள் வலியால் அலறி துடித்தும் கூட, ஆட்டோ டிரைவரின் மனம் இளகவில்லை. தொடர்ந்து அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினரில் ஒருவர் இந்த சம்பவத்தை அவரது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். மகளை அடித்து துன்புறுத்தும் ஆட்டோ டிரைவரின் வீடியோ காட்சிகள் பெரம்பலூரில் வைரலாகியது.
கைது
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்படி, போலீசார் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தந்தையிடம் இருந்து சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக ஆட்டோ டிரைவரை கைது செய்த பெரம்பலூர் போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story