கோவை-கேரள எல்லையில் 13 சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு
கொரோனா பரவலால் கோவை-கேரள எல்லையில் 13 சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளால் தொற்று பரவல் குறைந்து வருகிறது. இந்த நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், ஜிகா வைரஸ் பரவலும் தொடங்கியுள்ளது.
இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த நிலையில் கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள- கோவை எல்லைப் பகுதிகளான வாளையாறு, முள்ளி, மேல்பாவியூர், வேலந்தாவளம், வீரப்பகவுண்டனூர், கோபாலபுரம், மீனாட்சிபுரம், வழுக்குப்பாறை, ஆனைக்கட்டி உள்பட 13 சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இதன்படி சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, மற்றும் போலீசார் இணைந்து சுழற்சி முறையில் 24 பணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். கேரளாவில் இருந்து கோவைக்கு வருபவர்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் நேற்று வாளையாறு சோதனைச்சாவடியில் மாவட்ட கலெக்டர் சமீரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாகன ஓட்டிகளிடம் ஆவணங்களை வாங்கி சரிபார்த்தார். தொடர்ந்து சோதனைச்சாவடியில் மருத்துவ முகாம் அமைத்து கோவை மாவட்டத்திற்கு வரும் நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யவும் வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் மருத்துவம், இறப்பு, திருமணம், வணிகம் உள்ளிட்ட காரணங்களுக்காக இ-பாஸ் பெற்று கேரளாவில் இருந்து கோவைக்கு வருபவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story