மங்களூரு-பெங்களூரு இடையே ‘விஸ்டாடோம்’ ரெயில், முதல் பயணத்தை தொடங்கியது


மங்களூரு-பெங்களூரு இடையே ‘விஸ்டாடோம்’ ரெயில், முதல் பயணத்தை தொடங்கியது
x
தினத்தந்தி 12 July 2021 2:37 AM IST (Updated: 12 July 2021 2:37 AM IST)
t-max-icont-min-icon

மங்களூரு-பெங்களூரு இடையே ‘விஸ்டாடோம்’ பெட்டிகள் இணைக்கப்பட்ட ரெயில் தனது முதல் பயணத்தை தொடங்கியது. இந்த ரெயிலில் பயணம் செய்த பயணிகள் மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை கண்டு ரசித்தனர்.

மங்களூரு: மங்களூரு-பெங்களூரு இடையே ‘விஸ்டாடோம்’ பெட்டிகள் இணைக்கப்பட்ட ரெயில் தனது முதல் பயணத்தை தொடங்கியது. இந்த ரெயிலில் பயணம் செய்த பயணிகள் மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை கண்டு ரசித்தனர். 

‘விஸ்டாடோம்’ பெட்டிகள்

ரெயில் சுறறுலாவை அதிகப்படுத்த மத்திய அரசு பல்வேறு புதிய முயற்சிகளை செய்து வருகிறது. அதாவது, அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்லும் ரெயில்களில், கண்ணாடிகளால் வடிவமைக்கப்பட்ட புதிய பெட்டிகளை இணைத்து, இயற்கை அழகை கண்டு ரசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, மங்களூரு-பெங்களூரு யஷ்வந்தபுரம் இடையே இயங்கும் ரெயிலில், கண்ணாடிகளால் வடிவமைக்கப்பட்ட 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டிக்கு ‘விஸ்டாடோம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 

கர்நாடகத்தில் விஸ்டாடோம் பெட்டிகள் இணைக்கப்பட்ட ரெயில் தனது முதல் பயணத்தை நேற்று முதல் தொடங்கி உள்ளது. மங்களூருவில் இருந்து பயணத்தை தொடங்கும் இந்த ரெயிலில், சுப்பிரமணியா ரோடு முதல் சக்லேஷ்புரா வரை மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசிக்கலாம். 

நளின்குமார் கட்டீல் எம்.பி.

மங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை 9 மணிக்கு மங்களூரு-பெங்களூரு யஷ்வந்தபுரம் ரெயில் (வண்டி எண்: 06540) புறப்பட்டது. இந்த ரெயிலை தட்சிண கன்னடா தொகுதி பா.ஜனதா எம்.பி., பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரெயிலில் இயற்கை அழகை ரசிப்பதற்காக இணைக்கப்பட்டுள்ள 2 விஸ்டாடோம் பெட்டிகள் முழுவதும் குளிரூட்டப்பட்டவை ஆகும். இயற்கை அழகை பயணிகள் ரசிப்பதற்காக இந்த பெட்டியில் சுற்றி கண்ணாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை இந்த பெட்டியில் இருந்தபடி ரசிக்கலாம்.

இந்த விஸ்டாடோம் பெட்டியில் பயணிக்க ரூ.1,470 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்காக கடந்த வாரம் முன்பதிவு தொடங்கியது. சில நாட்களிலேயே டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன. மங்களூரு-பெங்களூரு இடையே பயணித்து, ரெயிலில் இருந்தவாறே இயற்கை அழகை ரசிக்க மக்கள் ஆர்வத்துடன் வந்தனர். 

மக்கள் கண்டு ரசித்தனர்

நேற்று காலை அந்த ரெயில் மங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பெங்களூரு நோக்கி சென்றது. 2 விஸ்டாடோம் பெட்டிகளும் முழுமையாக நிரம்பிவிட்டன. பயணிகள், அந்த பெட்டிகளில் அமர்ந்து மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை கண்டு ரசித்தனர். ரெயில்வேயின் இந்த புதிய முயற்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Next Story