எழும்பூர் ரெயில் நிலையத்தில் வெளியூர் செல்லும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை இதுவரை 6 பேருக்கு தொற்று உறுதி


எழும்பூர் ரெயில் நிலையத்தில் வெளியூர் செல்லும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை இதுவரை 6 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 12 July 2021 6:48 AM IST (Updated: 12 July 2021 6:48 AM IST)
t-max-icont-min-icon

எழும்பூர் ரெயில் நிலையத்தில் வெளியூர் செல்லும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ரெயில் நிலையங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ரெயில் நிலையங்களில் முக கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை பயணிகள் பின்பற்றுவதை தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. அதேபோல், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்பதிவு பெட்டிகள் கொண்ட ரெயில்கள் மட்டும் இயக்கப்படுவதால், அவசியமின்றி ரெயில் நிலையத்துக்குள் பொதுமக்கள் நுழைவதும் தடுக்கப்படுகிறது.

அவ்வாறு ரெயில் நிலையத்துக்குள் வருபவர்களுக்கு நடைமேடை டிக்கெட் விலையும் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், உடல் வெப்பநிலை கண்டறிதல், ஆக்சிஜன் அளவு கண்டறிதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல், சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வரும் பயணிகளுக்கும் மாநகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை முகாம் ரெயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநகராட்சி சுகாதார ஊழியர்கள், நேரடியாக ரெயில்களில் ஏறி, ரெயில் பெட்டியில் அமர்ந்திருக்கும் பயணிகளிடம் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்புகின்றனர். இந்தநிலையில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் ராயபுரம் மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகள் தினசரி, வெளியூர் செல்லும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.

பரிசோதனை செய்யும் முன்பு பயணியின் பெயர், ஆதார் எண், முகவரி, செல்போன் எண்ணை பெற்று கொள்கின்றனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறது. பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட பயணி எந்த மாவட்டத்தில் இருக்கிறாரோ, அந்த மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி இதுவரை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து பயணம் மேற்கொண்ட 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Story