கொரோனா தடுப்பூசி ‘ஆன்-லைன்’ முன்பதிவு மீண்டும் தொடங்கியது கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தகவல்


கொரோனா தடுப்பூசி ‘ஆன்-லைன்’ முன்பதிவு மீண்டும் தொடங்கியது கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தகவல்
x
தினத்தந்தி 12 July 2021 7:26 AM IST (Updated: 12 July 2021 7:26 AM IST)
t-max-icont-min-icon

பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி ‘ஆன்-லைன்’ முன்பதிவு மீண்டும் தொடங்கியது கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தகவல்.

சென்னை, 

தமிழகத்தில் ‘கோவேக்சின்’, ‘கோவிஷீல்டு’ ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்களுக்கு போடப்படுகிறது. ஆரம்பத்தில் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு தடுப்பூசி தொடர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில், தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசி போடப்பட்டது. மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்ள ‘ஆன்-லைனில்’ முன்பதிவு செய்பவர்களுக்கு தடுப்பூசி மையங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டு, முதலில் அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இந்தநிலையில், தமிழகத்தில் தடுப்பூசி தட்டுபாடு ஏற்பட்ட நிலையில், பல பகுதிகளில் ‘ஆன்-லைன்’ முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டு, நேரடியாக முகாம்களுக்கு செல்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு போடப்பட்டது. அதேபோல் பெருநகர சென்னை மாநகராட்சியிலும், தடுப்பூசி போட்டுக்கொள்ள ‘ஆன்-லைன்’ முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில், தற்போது நேற்று முன்தினம் 5 லட்சம் தடுப்பூசியும், நேற்று 3.62 லட்சம் தடுப்பூசியும் தமிழகத்துக்கு வந்துள்ளதால், தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், பெருநகர சென்னை மாநகராட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘ஆன்-லைன்’ முன்பதிவு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். அதன்படி சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாம்களில், ஒரு முகாமுக்கு 300 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் 100 தடுப்பூசிகள் ‘ஆன்-லைனில்’ முன்பதிவு செய்பவர்களுக்கும், 200 தடுப்பூசிகள் முன்பதிவு செய்யாமல், அப்போது நேரில் வருபவர்களுக்கும் போடப்படுவதாக, மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

Next Story