ஆவடியில் பாதுகாப்பு பணியின்போது விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


ஆவடியில் பாதுகாப்பு பணியின்போது விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
x
தினத்தந்தி 12 July 2021 7:33 AM IST (Updated: 12 July 2021 7:33 AM IST)
t-max-icont-min-icon

ஆவடியில் பாதுகாப்பு பணியின்போது விமானப்படை வீரர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆவடி, 

சென்னையை அடுத்த ஆவடியில் இந்திய விமானப்படை பயிற்சி தளம் உள்ளது. இங்கு விமானப்படை வீரர்களுக்கான பயிற்சி மையம் மற்றும் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் விஸ்வகர்மா (வயது 23) என்ற வீரர், கடந்த 3 ஆண்டுகளாக இந்த விமானப்படை தளத்தில் கண்காணிப்பு கோபுரத்தில் அமர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இன்னும் அவருக்கு திருமணம் ஆகவில்லை.

நேற்று மாலை 3 மணியளவில் அவர், வழக்கம்போல் பணிக்‌கு வந்து, விமானப்படை தளத்தில் உயரமாக இருக்கும் கண்காணிப்பு கோபுரத்தில் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். 2 மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு வீரர் அந்த கண்காணிப்பு கோபுரத்தில் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

அதன் அடிப்படையில் நேற்று மாலை 3 மணி முதல் 5 மணி வரை ஆகாஷ் விஸ்வகர்மா அங்கு பணியில் இருக்க வேண்டும். மாலை 5 மணிக்கு ஆகாஷ் விஸ்வகர்மாவை பணி மாற்றுவதற்காக மற்றொரு வீரர் கண்காணிப்பு கோபுரத்தின் மீது ஏறிச் சென்றார்.

அப்போது அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த ஆகாஷ் விஸ்வகர்மா, இருக்கையில் அமர்ந்தவாரே நெற்றியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்தம் கொட்டிய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆகாஷ் விஸ்வகர்மா, தான் பாதுகாப்பு பணியின்போது வைத்திருந்த ‘இன்சாஸ்’ என்ற வகை துப்பாக்கியால் தனது நெற்றியில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது.

இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு உயர் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சென்னையில் இருந்து தடய அறிவியல் துறை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விமானப்படை வீரர் ஆகாஷ் விஸ்வகர்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story