தண்டலம் கிராமத்தில் கிராமப்புற மருத்துவ மையம்; கவர்னர் திறந்து வைத்தார்


தண்டலம் கிராமத்தில் கிராமப்புற மருத்துவ மையம்; கவர்னர் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 12 July 2021 11:17 AM IST (Updated: 12 July 2021 11:17 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தண்டலம் கிராமம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது பீடாதிபதி காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிறந்த ஊர் ஆகும். இவர் தண்டலம் ஊராட்சியில் ஏழை, எளிய மக்கள் தரமான மருத்துவ சிகிச்சை பெற சிறந்த மருத்துவ சேவையை வழங்குமாறு ஸ்ரீ சங்கரா கிருபா கல்வி மற்றும் மருத்துவ டிரஸ்ட் அறக்கட்டளைக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் ரூ.80 லட்சம் மதிப்பில் மூன்று படுக்கைகள் வசதிகொண்ட சங்கரா கிராமப்புற மருத்துவ மையத்தை கட்டி முடித்தனர். இதனை சிறப்பு அழைப்பாளராக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், கனரா வங்கியின் முதன்மை பொது மேலாளர் ஸ்ரீ பழனிசாமி, செட்டிநாடு குழும தலைவர் முத்தையா, பால்வளத்துறை அமைச்சர் நாசர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., டி.ஜே.கோவிந்தராசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின்போது செட்டிநாடு குழுமத் தலைவர் முத்தையா இப்பகுதியில் முதியோர் இல்லம் கட்ட ரூ.10 லட்சம் நன்கொடைக்கான காசோலையை பன்வாரிலால் புரோகித் முன்னிலையில் வழங்கினார். இதன் பின்னர், தண்டலம் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இல்லத்திற்கு பன்வாரிலால் புரோகித் வந்தார். அப்போது அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அதன்பின்னர், அங்கு கட்டிமுடிக்கப்பட்டு இருந்த வேதபாடசாலையை திறந்து வைத்து பார்வையிட்டார்.

Next Story