மடத்துக்குளம் பகுதியில் விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளால் விபத்து கள் ஏற்படும் அபாயம்


மடத்துக்குளம் பகுதியில் விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளால் விபத்து கள் ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 12 July 2021 9:30 PM IST (Updated: 12 July 2021 9:30 PM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் பகுதியில் விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளால் விபத்து கள் ஏற்படும் அபாயம்

போடிப்பட்டி:
மடத்துக்குளம் பகுதியில் விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளால் விபத்து கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
விதிமீறல்
கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மட்டுமல்லாமல் மடத்துக்குளம் அருகிலுள்ள பல சாலைகளிலும் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான கல் குவாரிகள் இயங்கி வருகிறது. இங்கு வெட்டி எடுக்கப்படும் பாறைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு ஜல்லிக் கற்கள் மற்றும் எம் சாண்ட் எனப்படும் செயற்கை மணல் உற்பத்திக்காகக் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு கொண்டு செல்லப்படும் போது குறிப்பிட்ட அளவுக்கு மேல் பாரம் ஏற்றக் கூடாது.
மேல் பகுதியில் தூசி பறக்காத வகையில் மூடியபடி கொண்டு செல்ல வேண்டும். வாகனங்களில் கொண்டு செல்வதற்கு வருவாய்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆனால் இந்த விதிகளைக் கடைப்பிடிப்பதில் அலட்சியப் போக்கு நிலவுகிறது. குறிப்பாக லாரிகளில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக பாறைக் கற்களை ஏற்றிச் செல்கின்றனர்.
விபத்து அபாயம்
அவ்வாறு வாகனங்களில் ஏற்றிச்செல்லும்போது காற்றில் மணல் துகள்கள் பறக்கிறது. இதனால் பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் மணல் துகள்கள் விழுந்து தடுமாறி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. மேலும் லாரிகளில் உள்ள பாறைகள் எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் உள்ளது.  இதனால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே செல்ல வேண்டிய நிலை உள்ளது. 
அத்துடன் இவ்வாறு பாறாங்கற்கள் மற்றும் ஜல்லிக்கற்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அதிக வேகத்தில் இயக்கப்படுகிறது. இவ்வாறு அதிக வேகத்தில் இயக்கப்படும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிராம சாலைகளில் வேகக்கட்டுப்பாடு எதையும் கடைபிடிப்பதில்லை. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
நடவடிக்கை
மேலும் ஒரு சில வாகனங்கள் ஜல்லிக்கற்களை சாலையில் சிதற விட்டுச்செல்கிறது. இவ்வாறு சாலையில் சிதறிக்கிடக்கும் ஜல்லிக்கற்களால் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. மேலும் சாலையில் கிடக்கும் கூர்மையான கற்களால் வாகனங்கள் பஞ்சராகும் சூழலும் உள்ளது. எனவே பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக இவ்வாறு விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களை அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story