ஊட்டி மலைரெயிலுக்கு புதிய நீராவி என்ஜின்
ஊட்டி மலைரெயிலுக்கு புதிய நீராவி என்ஜின் தயாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி,
ஊட்டி மலைரெயிலுக்கு புதிய நீராவி என்ஜின் தயாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலைரெயில் இயக்கம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கடந்த 1899-ம் ஆண்டு முதல் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து குன்னூர் வரை நிலக்கரி மற்றும் பர்னஸ் ஆயில் கொண்டு நீராவி என்ஜின் மூலம் இயக்கப்பட்டு வந்தது.
உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 15-ந் தேதி நீலகிரி மலை ரெயில் நாளாக கொண்டாடப்படுகிறது.
புதிய தொழில்நுட்பங்கள்
நீலகிரி மலைரெயிலுக்காக ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த நீராவி என்ஜினில் பராமரிப்பு பணி திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் நடந்து வருகிறது. மேலும் அங்கு புதிய நீராவி என்ஜின் தயாரிக்கப்பட்டு வருகிறது.
உந்து சக்தி குறைவு காரணமாக கல்லார்-குன்னூர் இடையே அவ்வப்போது ரெயில் பழுதாகி நின்றது. இதை கருத்தில் கொண்டு புதிய தொழில்நுட்பங்களோடு, நீராவி என்ஜின்கள் தயாராகி வருகின்றது. வருகிற ஆகஸ்டு மாதம் நீராவி என்ஜின்கள் மேட்டுப்பாளையத்துக்கு கொண்டு வரப்பட உள்ளது.
புதிய நீராவி என்ஜின்
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:- நீலகிரி மலைரெயிலில் பயன்படுத்த 2 நீராவி என்ஜின்களின் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தியாவில் முதல் முறையாக புதிய நீராவி என்ஜின் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த என்ஜினில் பயன்படுத்தப்படும் 3 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட உதிரி பாகங்களில், 1,200 உதிரி பாகங்கள் பொன்மலை ரெயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்டது.
மீதமுள்ள உதிரிபாகங்கள் இந்தியாவின் பல்வேறு இடங்களில் தயாரிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டது. சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு 2 நீராவி என்ஜின்கள் ஊட்டி மலைரெயிலில் சேர்க்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story