விளை நிலங்களில் இருந்து கெயில் எரிவாயு குழாய்களை அகற்ற வேண்டும்-விவசாயிகள் கலெக்டரிடம் மனு


விளை நிலங்களில் இருந்து கெயில் எரிவாயு குழாய்களை அகற்ற வேண்டும்-விவசாயிகள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 12 July 2021 10:37 PM IST (Updated: 12 July 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

விளை நிலங்களில் இருந்து கெயில் எரிவாயு குழாய்களை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கிருஷ்ணகிரி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி:
எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம்
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வக்கீல் ஈசன் தலைமையில், விவசாயிகள் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கெயில் நிறுவனம் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து பெங்களூருவுக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்ட விவசாய நிலங்கள் வழியாக எரிவாயுவை கொண்டு செல்ல குழாய் அமைக்க கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதனால் பாதிக்கப்படும் 7 மாவட்ட விவசாயிகள், ஒருங்கிணைந்து போராடியதால், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சாலையோரம் வழியாக இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொள்ளப்பட்டது.
அகற்ற வேண்டும்
இந்தநிலையில் விவசாயிகள் போராட்டம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த திட்டம், கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கப்பட்டது. மேலும், கெலமங்கலத்தில் விளை நிலங்களில் குழிகள் தோண்டப்பட்டு குழாய் பதிக்கும் பணி மும்முரமாக நடந்தது. இதை அறிந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனவே விளை நிலங்கள், விவசாயிகளை பாதிக்கும் இந்த திட்டத்தை கைவிட்டு, குழாய்களை அகற்ற வேண்டும். மேலும், இந்த திட்டத்தை புதிதாக அமைக்கப்பட உள்ள தர்மபுரி-ஓசூர் 4 வழிச்சலை வழியாக சாலையோரம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அதில் அவர்கள் கூறியிருந்தனர்.

Next Story