2 மாதங்களுக்கு பிறகு கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு பஸ்கள் இயக்கம்


2 மாதங்களுக்கு பிறகு கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 12 July 2021 10:37 PM IST (Updated: 12 July 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

2 மாதங்களுக்கு பிறகு கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடலூர், 

கொரோனா வைரஸ் 2-வது அலை பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் அண்டை மாநிலமான புதுச்சேரி அரசு, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஏப்ரல் மாத இறுதியிலேயே பொது போக்குவரத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் தமிழக பஸ்களை புதுச்சேரி மாநிலம் வழியாக இயக்கவும் தடை விதித்தது.
இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் இருந்து கடந்த 2 மாதமாக புதுச்சேரிக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. கடலூரில் இருந்து சென்னைக்கு சென்ற பஸ்கள் விழுப்புரம் வழியாக இயக்கப்பட்டது. இதனால் கடலூர் மாவட்ட மக்கள், புதுச்சேரிக்கு செல்ல முடியாமல் பெரிதும் சிரமப்பட்டனர். ஒரு சிலர் மட்டும் கார், இருசக்கர வாகனங்களில் சென்று வந்தனர்.

ஊரடங்கில் தளர்வு

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் குறைய தொடங்கியுள்ளதையடுத்து, ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி தமிழக பஸ்களை புதுச்சேரி மாநிலத்திற்குள் இயக்கலாம் என அரசு அறிவித்தது. அதற்கு அம்மாநில அரசும் அனுமதி அளித்தது.

இதையடுத்து சுமார் 2 மாதங்களுக்கு பிறகு கடலூர் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரிக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் கடலூர் பஸ் நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பின்னர் புதுச்சேரி செல்லும் பஸ்கள் பேருந்து நிலையத்திற்குள் வந்ததும், பயணிகள் முண்டியடித்துக் கொண்டு பஸ்களில் ஏறி, புதுச்சேரிக்கு பயணம் செய்தனர்.

பயணிகள் மகிழ்ச்சி

கடலூரில் இருந்து 47 அரசு பஸ்களும், சிதம்பரத்தில் இருந்து 28 பஸ்களும் புதுச்சேரிக்கு இயக்கப்பட்டன. பஸ்களில் 50 சதவீத பயணிகள் மட்டும் தான் பயணிக்க வேண்டும் என அரசு அறுவுறுத்தி இருந்த போதிலும், கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்பட்ட பெரும்பாலான பஸ்களில் கூட்டம் அலைமோதியது. இருக்கைகள் அனைத்தும் நிரம்பியதால், பலர் பஸ்களில் நின்றபடி பயணம் செய்ததை காண முடிந்தது. இருப்பினும் 2 மாதங்களுக்கு பிறகு புதுச்சேரிக்கு பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story