நாமக்கல்லில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
நாமக்கல்லில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
நாமக்கல்:
நாமக்கல்லில் குடிநீர் கேட்டு பெண்கள் திடீரென காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்
நாமக்கல் அருகே உள்ள ரெட்டிப்பட்டி ஊராட்சி எஸ்.கே.நகர் பகுதியில் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 3 மாதங்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலிக்குடங்களுடன் நாமக்கல்- திருச்சி பிரதான சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
3 மாதங்களாக குடிநீர் இல்லை
அப்போது குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கடந்த 3 மாதங்களாக குடிநீர் இல்லாமல் சிரமப்படுவதாகவும், லாரிகளில் கொண்டு வரும் தண்ணீரை குடம் ஒன்று ரூ.10 கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றோம் என்றும், ஊராட்சி நிர்வாகத்தினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.
Related Tags :
Next Story