கிணற்றில் சிக்கிய வாலிபர் 15 மணி நேரத்திற்குபிறகு பிணமாக மீட்பு
குடியாத்தம் அருகே குளிக்க சென்றபோது கிணற்றில் சிக்கிய வாலிபர் 15 மணி நேரத்திற்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டார்.
குடியாத்தம்
கிணற்றில் சிக்கினார்
குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டி சாமியார் மலை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் துளசிராமன். இவருடைய மகன் ஆகாஷ் (வயது 20). நேற்று முன்தினம் மாலை குளிக்க சென்றார். கிணற்றில் குதித்தபோது 50 அடி தண்ணீருக்குள் உள்ள சேற்றில் சிக்கியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தண்ணீர் 50 அடி தண்ணீர் இருந்ததால் அவரை மீட்க முடியவில்லை.
இதனையடுத்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக் மன்சூர், தாசில்தார் வத்சலா, குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் தயாளன், நகராட்சி ஆணையாளர் பொறுப்பு சிசில் தாமஸ் உள்ளிட்ட வருவாய்த் துறையினர், காவல் துறையினர், ஊரகவளர்ச்சி துறையினர் அங்கேயே முகாமிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.
பிணமாக மீட்பு
குடியாத்தம் நகராட்சி, வேலூர் மாநகராட்சி மற்றும் தனியார் கழிவுநீர் அகற்றும் வாகனம் என 5 வாகனங்கள் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீரை இறைத்தனர். ஆனாலும் தண்ணீர் குறையவில்லை. அதைத்தொடர்ந்து பாதள கொலுசு மூலம் கிணற்றில் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று காலை குடியாத்தம் வந்தனர். அதற்குள் காலை சுமார் 7.30 மணி அளவில் பாதாள கொலுசு மூலம் ஆகாஷின் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுமார் 15 மணி நேரத்திற்கு பிறகு ஆகாஷ் உடல் மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story