மொத்த விற்பனை காய்கறி கடைகள் அடைப்பு
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் மீண்டும் கடைகளை திறக்க அனுமதிக்கக்கோரி மொத்த காய்கறி விற்பனை வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்
நேதாஜி மார்க்கெட்
வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் இயங்கிய மொத்த விற்பனை காய்கறி கடைகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மாங்காய் மண்டி அருகே உள்ள மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தன. தொற்று குறைவு காரணமாக தற்போது நேதாஜி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மொத்த விற்பனை காய்கறி கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படவில்லை.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் மொத்த காய்கறி வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் வேலூரில் நேற்று முதல் காய்கறி மொத்த வணிகம் நிறுத்தப்படும். மாவட்ட நிர்வாகம் நேதாஜி மார்க்கெட்டில் மொத்த விற்பனை காய்கறி கடைகள் திறக்க எப்போது அனுமதி வழங்குகிறதோ அப்போதுதான் மீண்டும் காய்கறி கடைகள் திறக்கப்படும். இதனை வலியுறுத்தி வருகிற 16-ந் தேதி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காய்கறி கடைகள் அடைப்பு
கொரோனா தொற்று முழுமையாக ஒழியும் வரை நேதாஜி மார்க்கெட்டில் மொத்த விற்பனை காய்கறி கடைகள் திறக்க அனுமதி வழங்க முடியாது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனால் வியாபாரிகள் ஏற்கனவே அறிவித்தது போன்று வேலூரில் நேற்று மொத்த காய்கறி விற்பனையை நிறுத்தினர். மாங்காய் மண்டி அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த 80 மொத்த விற்பனை காய்கறி கடைகள் அடைக்கப்பட்டன. அதனால் காய்கறி வாங்க வந்த சில்லரை விற்பனை காய்கறி வியாபாரிகள், மளிகை கடைக்காரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் தற்காலிக மார்க்கெட்டிற்கு வெளியே வாகனங்களில் விற்ற காய்கறிகளை வாங்கி சென்றனர்.
மொத்த விற்பனை காய்கறி கடைகள் அடைக்கப்பட்டதால் இங்கிருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் வேலூரின் பல்வேறு பகுதிகளுக்கு காய்கறி வினியோகம் பாதிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக்கோரி மொத்த விற்பனை காய்கறி கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story