கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டியால் பரபரப்பு
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர்
மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், பொருந்தலூர் கிராமம், தெலுங்கப்பட்டியை சேர்ந்தவர் மாரியாயி (வயது 60). இவர் கோவில்களில் விளக்கு எண்ணெய் விற்று வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அப்போது பையில் தான் மறைத்து வைத்து இருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து தீக்குளிக்க முயற்சி செய்தார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் ஒருவர் மாரியாயியிடம் இருந்து மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கி, அவரை சமாதானம் செய்தார். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கலெக்டரிடம் மனு
இதனையடுத்து கலெக்டர் பிபுசங்கரை சந்தித்து மாரியாயி ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், அரசு வழங்கிய பட்டா நிலத்தில் நான் 45 வருடமாக இருந்து கொண்டு வீடு கட்டி குடியிருந்து வருகிறேன். இந்தநிலையில் எவ்வித ஆவணம் இல்லாத சிலர், எனது இடத்தை அபகரிக்க முயற்சி செய்து வருகின்றனர். மேலும், பொய்யான ரசீது பெற்றும், என் வீட்டு முன்பு ஓலை தடுப்பும், பிறகு காம்பவுண்டு போட்டு தடுத்துள்ளனர். இதுகுறித்து கேட்டதற்கு என்னை அடித்தும், தகாத வார்த்தைகளால் திட்டினர். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார். .
Related Tags :
Next Story