ஆடலூரில் வாழைகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்


ஆடலூரில் வாழைகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்
x
தினத்தந்தி 13 July 2021 12:33 AM IST (Updated: 13 July 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

ஆடலூரில் தோட்டத்திற்குள் புகுந்து காட்டு யானைகள் வாழைகளை சேதப்படுத்தின.

கன்னிவாடி:
கொடைக்கானல் கீழ்மலை பகுதியான ஆடலூர் மலைப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் பலரும் வாழை மற்றும் காபி பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர்.
இந்தநிலையில் ஆடலூரை சேர்ந்த பிச்சைமணி மனைவி ராமுத்தாய் என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்திற்குள் நேற்று முன்தினம் இரவு 3 காட்டு யானைகள் புகுந்தது. அப்போது அவை தோட்டத்தில் இருந்த வாழைகளை சேதப்படுத்தின. விடிய, விடிய அங்கேயே முகாமிட்ட காட்டு யானைகள் சுமார் 60 வாழை மரங்களை சேதப்படுத்தின.  
இதற்கிடையே நேற்று காலை வழக்கம்போல் தோட்டத்திற்கு வந்த ராமுத்தாய், காட்டு யானைகள் அங்கு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து அவர் கன்னிவாடி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனச்சரகர் சக்திவேல், அலுவலர் அப்துல் ரகுமான், வனக்காப்பாளர் ரமேஷ் மற்றும் வனவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். 
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஆடலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. எனவே காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Next Story