நெல் கொள்முதல் நிலையங்களில் கலெக்டர் ஆய்வு


நெல் கொள்முதல் நிலையங்களில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 12 July 2021 7:37 PM GMT (Updated: 12 July 2021 7:37 PM GMT)

விழுப்புரம், திண்டிவனம் மற்றும் விக்கிரவாண்டி நெல்கொள்முதல் நிலையங்களில் கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே கல்பட்டு, காணை ஆகிய கிராமங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட கலெக்டர் டி.மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எவ்வளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது எனவும், நெல் கொள்முதல் செய்வதில் எடையளவு சரியாக உள்ளதா, நெல் கொள்முதல் ரகங்கள் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதற்கான தேவையான இடவசதி உள்ளதா என்று பார்வையிட்டார்.
மேலும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விடாதவாறு பாதுகாப்பாக தார்பாய்களை கொண்டு மூடி வைக்கவும், அதிகப்படியான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டால் உடனடியாக அவற்றை வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்குழு சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல் கொள்முதல் நிலைய அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

பணப்பட்டுவாடா 

தொடர்ந்து, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு பணப்பட்டுவாடா எவ்வாறு செய்யப்படுகிறது எனவும், நெல்லில் கற்கள், பதர்கள் இல்லாமல் நெல் மணிகளை தூற்றுமாறும், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டோக்கன் முறையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) சரஸ்வதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பெரியசாமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ஷீலா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அறிவுடைநம்பி ஆகியோர் உடனிருந்தனர்.

திண்டிவனம்

இதையடுத்து திண்டிவனம் செஞ்சி ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது  நெல் மூட்டைகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்றும், குடிநீர், கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என்று அவர் பார்வையிட்டார். அப்போது நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர்  ஷீனா  உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். 

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி தாலுகா பகுதிகளில் செயல்படும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் இருப்பு வைக்க போதிய இடம் இல்லாததால், அவைகள் மழையில் நனைந்து வீணாகி வருகின்றன. இதை தடுக்கும் வகையில், நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகளை விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள தானிய கிடங்கில் வைப்பது தொடர்பாக கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர், அங்கிருந்த அதிகாரிகளிடம், நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகளை பாதுகாப்பாக விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி படி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது தாசில்தார் தமிழ்செல்வி, வேளாண்மை உதவி இயக்குனர் மாதவன், விற்பனைக் கூட செயலாளர் ஜாக்குலின்மேரி, தனி தாசில்தார் கணேசன் உள்பட பலர் உடன் இருந்தனர். 

Next Story