தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் விரைவில் நிறைவுபெறும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்
தூத்துக்குடி விமானநிலைய விரிவாக்கப்பணிகள் விரைவில் நிறைவுபெறும் கனிமொழி எம்.பி. தகவல்
தூத்துக்குடி:
தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் விரைவில் நிறைவுபெறும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
தடுப்பூசி முகாம்
தூத்துக்குடி விமான நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு, தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.
100 சதவீத ஊழியர்களுக்கு தடுப்பூசி
நேற்று விமான நிலையத்தில் பணியாற்றி வரும் அலுவலர்கள், ஒப்பந்த ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்கள் உள்பட 180 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதன்மூலம் நாட்டிலேயே 100 சதவீதம் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட விமான நிலையமாக தூத்துக்குடி விமான நிலையம் மாறி உள்ளது.
முகாமில் தூத்துக்குடி விமான நிலைய மேலாளர் ஜெயராமன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விரிவாக்க பணிகள்
பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாவட்டத்தின் அனைத்து துறைகளில் பணியாற்றுபவர்களுக்கும், அனைத்து பகுதி மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் இதுவரை 2 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 1 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் வேகமாக நடந்து வருகிறது. விமான நிலைய விரிவாக்க சுற்றுச்சுவர் கட்டும் பணி, இரவு நேரங்களில் விமானம் தரையிறங்குவதற்கு வல்லநாடு மலைப்பகுதியில் சிக்னல் டவர் அமைக்கும் பணி, விமான நிலைய ஓடுபாதை நீளம் அதிகரிக்கும் பணி உள்ளிட்டவை நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் விரைவில் நிறைவுபெறும். விமான நிலையத்தில் ராணுவ விமானங்கள் தரையிறங்குவதற்கு பிரத்யேகமாக ஓடுதளபாதை அமைப்பது குறித்து எதுவும் ஆலோசிக்கப்படவில்லை. இதுகுறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலோசனை குழு கூட்டம்
இதையடுத்து தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனை குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஆலோசனை குழு தலைவர் கனிமொழி எம்.பி. தலைமை தாக்கி பேசியதாவது:-
தூத்துக்குடி விமான நிலையம் சிறந்த விமான நிலையமாக மாற்றிடும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விமான நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தூத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்த தேவையான உதவிகளை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் விரைந்து வழங்கும். விமான நிலைய பணிகளை எதிர்கால தேவைக்கு தகுந்தவாறு இப்போதே திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் அரசு அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story