ஊரடங்கு தளர்வால் அலைமோதும் கூட்டம்: வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை


ஊரடங்கு தளர்வால் அலைமோதும் கூட்டம்: வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 13 July 2021 2:03 PM GMT (Updated: 13 July 2021 2:03 PM GMT)

ஊரடங்கு தளர்வால் அலைமோதும் கூட்டம் கூடும் நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இறங்குமுகத்தில் இருப்பதை கருத்தில் கொண்டு, சில ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்ததையடுத்து, வணிக வளாகங்களிலும், சுற்றுலா தலங்களிலும் அலைமோதிய கட்டுக்கடங்காத கூட்டத்தை பார்க்கும்போது, 3-வது அலைக்கு வழிவகுத்து விடுமோ? என்ற அச்சம்தான் மேலோங்கி நிற்கிறது.

மக்களின் வாழ்வாதாரம், அத்தியாவசியத் தேவைகள், மாநிலத்தின் பொருளாதாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வணிக வளாகங்களை திறக்கவும், உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை பூங்காக்கள் ஆகியவை செயல்படவும் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது.

நிதர்சனமான உண்மை

அதே சமயத்தில், கடைகளின் நுழைவு வாயில்களில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயம் வைக்கப்பட வேண்டும் என்றும், உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அனைவரும் முக கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும், குளிர்சாதன வசதி பயன்படுத்தப்படும் இடங்களில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறக்கப்பட வேண்டும் என்றும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், கடைகளின் நுழைவு வாயில்களில் இடைவெளியை பராமரிக்கும் வகையில் குறியீடு போடப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால், இந்த வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இதுகுறித்த செய்திகள் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. விதியை மீறுபவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டாலும், இது கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த எவ்விதத்திலும் பயன்படாது. மாறாக நோய்த் தொற்றினை அதிகரிக்கவே வழிவகுக்கும் என்பதே அனைவரின் கருத்தாக அமைந்துள்ளது.

கடும் நடவடிக்கை

எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடி கவனம் செலுத்தி, வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதனை அந்தந்த பகுதிகளில் உள்ள காவல் துறையினர் கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என்றும், எக்காரணத்தை கொண்டும் கூட்டம் கூட அனுமதிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story