உடுமலை பகுதியில் தக்காளியில் ஏற்பட்டுள்ள பூஞ்சை நோய் தாக்குதலால் செடிகள் கருகி வருவது விவசாயிகளை வேதனையடையச் செய்துள்ளது.


உடுமலை பகுதியில் தக்காளியில் ஏற்பட்டுள்ள பூஞ்சை நோய் தாக்குதலால் செடிகள் கருகி வருவது விவசாயிகளை வேதனையடையச் செய்துள்ளது.
x
தினத்தந்தி 13 July 2021 9:37 PM IST (Updated: 13 July 2021 9:37 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை பகுதியில் தக்காளியில் ஏற்பட்டுள்ள பூஞ்சை நோய் தாக்குதலால் செடிகள் கருகி வருவது விவசாயிகளை வேதனையடையச் செய்துள்ளது.

போடிப்பட்டி:
உடுமலை பகுதியில் தக்காளியில் ஏற்பட்டுள்ள பூஞ்சை நோய் தாக்குதலால் செடிகள் கருகி வருவது விவசாயிகளை வேதனையடையச் செய்துள்ளது.
பூஞ்சை நோய்
உடுமலை பகுதியில் தக்காளி சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் தக்காளி தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இதுதவிர கேரள மாநிலத்துக்கும் அதிக அளவில் கொண்டு செல்லப்படுகிறது. அடிக்கடி தக்காளி விலை சரிவைச் சந்தித்து வருவதால் விவசாயிகள் இழப்பை சந்திக்கின்றனர். ஆனாலும் மீண்டும் மீண்டும் தக்காளி சாகுபடியில் பலரும் ஈடுபடுகின்றனர். 
இந்தநிலையில் உடுமலையை அடுத்த வாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளிப் பயிர்களில் ஒருவிதமான பூஞ்சை நோய் தாக்குதல் ஏற்பட்டு பயிர்கள் கருகுவது விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
தக்காளி செடிகளில் திடீரென்று ஒரு சில பகுதிகள் மஞ்சள் நிறமாக மாறி கருகத் தொடங்குகிறது. மேலும் தக்காளி காய்களின் அடிப்பகுதியில் காயம் போல தெரிவதுடன் அந்த பகுதியில் பூஞ்சை படர்ந்தது போல மாறி அழுகி விடுகிறது. இதனால் பெருமளவு மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
 வாடல் நோய்
இதுகுறித்து உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கூறியதாவது:-
தக்காளியில் காணப்படும் இந்த நோய் புசேரியம் வாடல் எனப்படும் பூஞ்சை நோயாகும். இது பரவும் தன்மை கொண்டது என்பதால் உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும். வேர்களில் உள்ள காயங்கள் மூலமாக இந்த நோய்க் காரணிகள் செடிகளுக்குள் நுழைகிறது. 
நோயின் முதல் அறிகுறியாக கிளை நரம்புகள் வெளிர் நிறமாக மாறி, இலைகளில் பசுமை சோகை ஏற்படும். செடிகளின் கீழ் இலைகள் முதலில் மஞ்சள் நிறமாக மாறும் மற்றும் சிற்றிலைகள் கருகி காய்ந்துவிடும். இந்த அறிகுறி தொடர்ச்சியாக மற்ற இலைகளுக்கும் பரவத் தொடங்கும். இந்த பூஞ்சை தாவரங்களில் நீரின் இயக்கத்தைக் குறைப்பதால் செடிகள் வாடிவிடும்.
செடிகளை அழிக்க வேண்டும்
தற்போதைய நிலையில் மற்ற செடிகள் பாதிக்கப்படாமல் தவிர்க்க, பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றி அழித்து விட வேண்டும். மேலும் 10 லிட்டர் நீருக்கு 10 கிராம் கார்பென்டாசிம் 0.1 சதவீதம் அல்லது 20 கிராம் குளோரோதலனில் அல்லது 20 கிராம் மான்கோசெப் மருந்தை கலந்து பயிர்கள் நனையும் வரை தெளிக்க வேண்டும். பொதுவாக கோடை உழவு செய்வதன் மூலம் நோய்க் காரணிகளை அழிக்க முடியும். மேலும் நல்ல தரமான நாற்றுகளைப் பயன்படுத்த வேண்டும்.
பெரும்பாலும் தற்போது உடுமலை பகுதியில் நாற்றுகள் மூலமே நடவு மேற்கொள்ளப்படுகிறது. நாற்று உற்பத்தியின்போது தரமான விதைகளைப் பயன்படுத்துவதும், நுண்ணுயிர்க் கொல்லிகள் மூலம் விதை நேர்த்தி செய்வதும் இந்த நோய் உருவாகாமல் தடுக்கும். மேலும் சுழற்சி முறையில் வாடல் நோய் தாக்காத தானியப் பயிர்களைப் பயிரிடுவதன் மூலமும் இந்த நோய் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
இவ்வாறு  அவர் கூறினார்.

Next Story