தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கக்கோரி இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கக்கோரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி,
தமிழகத்திற்கு 14 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களில் தடுப்பூசி உற்பத்தியை போர்க்கால அடிப்படையில் உடனடியாக தொடங்க வேண்டும். செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராயக்கோட்டை 4 ரோட்டில் உள்ள அண்ணாசிலை அருகே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ராமமூர்த்தி தலைமை தாங்கினார். தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநில தலைவர் கெம்பன் கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் தொட்ட திம்மனஅள்ளி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சென்றாயன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி வட்டார தலைவர் தொட்டன், முன்னாள் கவுன்சிலர் ரமேஷ், நகர செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
அனுமந்தீர்த்தம், தேன்கனிக்கோட்டை
ஊத்தங்கரை அருகே உள்ள அனுமந்தீர்த்தத்தில் இளைஞர் பெருமன்றம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட துணை தலைவர் கலைக்கோவன் தலைமை தாங்கினார். வட்ட துணை செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சேகர் பேசினார். இதில் கொரோனா தடுப்பூசி வழங்குவதில் தமிழக அரசுக்கு பாகுபாடு காட்டக்கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் கபிலன், மகளிர் ஒன்றிய பொறுப்பாளர் ரஜியாபேகம் மற்றும் முத்து, பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நகர செயலாளர் முகுந்தன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் சாகுல் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் சம்பேக்லாலு நாகராஜ், சென்னீரப்பா உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story