2 பைபர் படகுகளுக்கு மர்ம நபர்கள் தீவைப்பு


2 பைபர் படகுகளுக்கு மர்ம நபர்கள் தீவைப்பு
x
தினத்தந்தி 13 July 2021 9:47 PM IST (Updated: 13 July 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் 2 பைபர் படகுகளுக்கு மர்ம நபர்கள் தீவைத்து எரித்தனர். இதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான மீன்பிடி தளவாட பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

வெளிப்பாளையம்,ஜூலை.14-
நாகையில் 2 பைபர் படகுகளுக்கு மர்ம நபர்கள் தீவைத்து எரித்தனர். இதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான மீன்பிடி தளவாட பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
படகுகளுக்கு தீவைப்பு
நாகை அக்கரைப்பேட்டை திடீர்குப்பத்தை சேர்ந்தவர் கவியரசு (வயது 47). இவர் புதிதாக வாங்கி வந்த பைபர் படகை திடீர்குப்பம் கடுவையாற்றின் கரையில் நிறுத்தி வைத்திருந்தார். இதேபோல அதே  பகுதியை சேர்ந்த மீனவரான ரத்தினவேல் என்பவர் தனது பைபர் படகையும் அங்கு நிறுத்தி வைத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த 2 படகுகள் மீது டீசலை ஊற்றி மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தாக கூறப்படுகிறது. இதில் பைபர் படகுகள் தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த படகு உரிமையாளர் கவியரசு மற்றும் மீனவர்கள் அங்கு வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் 2 படகுகளும் கொழுந்து விட்டு எரிந்தது. மீனவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அருகருகே இருந்த 50-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் தப்பின. 
போலீசார் விசாரணை
 இந்த தீவிபத்தில் எரிந்து சேதம் அடைந்த 2 படகுகளில் இருந்த வலை, 2 என்ஜின் உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான மீன்பிடி தளவாட பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து கவியரசு மற்றும் ரத்தினவேல் ஆகியோர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் நாகை கடலோர சட்ட அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து படகுகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் பெற்று வாங்கிய படகுகள் முற்றிலும் தீயில் எரிந்து சேதமடைந்ததால் புதிய படகுகள் வாங்க அரசு உதவி செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளுக்கு மர்ம நபர்கள் தீவைத்த சம்பவம் மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story