எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தை அகற்ற முயன்ற தி.மு.க. உறுப்பினர்
வேதாரண்யம் ஒன்றியக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தை தி.மு.க. உறுப்பினர் அகற்ற முயன்றதற்கு அ.தி.மு.க.வினர் எதிப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ஒன்றியக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தை தி.மு.க. உறுப்பினர் அகற்ற முயன்றதற்கு அ.தி.மு.க.வினர் எதிப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒன்றியக்குழு கூட்டம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் கமலா அன்பழகன் தலைமையில் நடந்தது. ஆணையர்கள் ராமலிங்கம், வெற்றி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி வரவேற்றார்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் பரிமளா, ராஜசேகரன், வைத்தியநாதன், கண்ணகி, செல்லமுத்து, ஜெகநாதன், கோமதி, உஷாராணி, துணை தலைவர் அறிவழகன் ஆகியோர் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினை குறித்து பேசினர்.
வாக்குவாதம்
கூட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க. உறுப்பினர் வைத்தியநாதன் அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த தலைவர்கள் படங்களில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் படத்தை அகற்ற முயன்றார். அப்போது அவரது கைக்கு எட்டாததால் நாற்காலியை எடுத்து கொண்டு கூட்ட மேடையை நோக்கி சென்றார்.
இதை பார்த்த அதிகாரிகள், அ.தி.மு.க. உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தினர். இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள், வைத்தியநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கட்சி பாகுபாடின்றி
ஒன்றியக்குழு தலைவர்(அ.தி.மு.க.) கமலா அன்பழகன் கூறுகையில், எனது அறையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படத்தை கட்சி பாகுபாடின்றி எனது அறையில் யாரும் சொல்லாமலேயே வைத்துள்ளேன் என்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிசெல்வன் கூறுகையில், ஒன்றியக்குழு கூட்ட அரங்கில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி படம் வைப்பது குறித்து உயர் அதிகாரிகளிடம் கேட்டு முடிவு எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story