2-வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த முடியாமல் மக்கள் தவிப்பு


2-வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த முடியாமல் மக்கள் தவிப்பு
x
தினத்தந்தி 13 July 2021 9:55 PM IST (Updated: 13 July 2021 9:55 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் கோவேக்சின் தட்டுப்பாடு எதிரொலியாக கொரோனா தடுப்பூசி செலுத்த முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

தேனி: 


கோவேக்சின் தட்டுப்பாடு
நாடு முழுவதும் கொரோனா வைரசிடம் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளையும் மத்திய அரசு கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறது. 

அதன்படி, தமிழகத்தில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் தடுப்பூசிகள் மக்களுக்கு துரிதமாக செலுத்தப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 2 லட்சத்து 53 ஆயிரத்து 831 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசி 2 லட்சத்து 23 ஆயிரத்து 418 பேருக்கு செலுத்தப்பட்டது. 30 ஆயிரத்து 413 பேர் இரு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டனர்.

மாவட்டத்தில் கோவிஷீல்டு 2 லட்சத்து 23 ஆயிரத்து 961 டோஸ் மற்றும் கோவேக்சின் 29 ஆயிரத்து 870 டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசியே அதிக அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. கோவேக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. கடந்த ஒரு வார காலமாக தேனி மாவட்டத்தில் கோவேக்சின் செலுத்தப்படவில்லை.

மக்கள் தவிப்பு
கோவேக்சின் தடுப்பூசி போதிய அளவில் ஒதுக்கீடு செய்யப்படாததால் மாவட்டத்தில் இந்த தடுப்பூசியை முதல் தவணை செலுத்திக் கொண்ட மக்கள், 2-வது தவணை செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். கோவேக்சின் முதல் தவணை செலுத்திக் கொண்டவர்கள் 28 நாட்களுக்கு பிறகு 2-வது தவணை செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆனால், 28 நாட்கள் கடந்தும் சுமார் ஒரு மாத காலமாக மக்கள் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக காத்திருக்கின்றனர். அதிக நாட்கள் தாமதமாக 2-வது தவணை செலுத்தினால் அது முழுமையான பலன் அளிக்குமா? அளிக்காதா? என்ற குழப்பத்திலும், அச்சத்திலும் மக்கள் பரிதவித்து வருகின்றனர். 

இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கொரோனா கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொண்டாலும் தெளிவான பதில் கிடைப்பதில்லை என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

எனவே, 2-வது தவணை தடுப்பூசி தாமதத்தால் தவிக்கும் மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் கோவேக்சின் தடுப்பூசியை போதிய அளவில் ஒதுக்கீடு செய்து மக்களுக்கு செலுத்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story