திண்டுக்கல் அருகே கல்லறை தோட்டத்துக்குள் புகுந்து சிலுவைகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள்
திண்டுக்கல் அருகே கல்லறை தோட்டத்தில் இருந்த சிலுவைகளை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சின்னாளப்பட்டி:
திண்டுக்கல் அருகே கல்லறை தோட்டத்தில் இருந்த சிலுவைகளை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்லறை தோட்டம்
திண்டுக்கல் அருகே ஏ.வெள்ளோடு பெரிய கண்மாய் அருகே கல்லறை தோட்டம் உள்ளது. இங்கு ஏ.வெள்ளோடு பகுதியை சேர்ந்தவர்கள் யாரேனும் இறந்தால் அவர்களது உடல் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கல்லறை தோட்டத்தில் உள்ள ஒவ்வொரு கல்லறையிலும் மரம், சிமெண்டு மற்றும் கல்லால் செய்யப்பட்ட சிலுவைகள் வைக்கப்பட்டு இறந்தவரின் பெயர் எழுதி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந்தேதி கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் ஏ.வெள்ளோடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்றுகூடி இந்த கல்லறை தோட்டத்தில் வழிபாடு நடத்துவது வழக்கம்.
சிலுவைகள் சேதம்
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஏ.வெள்ளோடு கல்லறை தோட்டத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்குள்ள கல்லறைகளில் ஊன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 30 சிலுவைகளை உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். இதனால் கல்லறை தோட்டத்தில் ஆங்காங்கே சிலுவைகள் சிதறிக்கிடந்தன.
இந்தநிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள், சிலுவைகள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக ஊர் பொதுமக்களுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஏ.வெள்ளோடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கல்லறை தோட்டத்தில் குவிந்தனர். அப்போது அவர்கள் சிலுவைகளை சேதப்படுத்திய மர்மநபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
அப்போது அங்கு வந்த ஊர் நாட்டாண்மை யாக்கோபு, மணியகாரர் அருளானந்து ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இதுதொடர்பாக போலீசாரிடம் முறையாக புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
போலீசில் புகார்
பின்னர் சிலுவைகளை சேதப்படுத்தியது குறித்து ஊர் நாட்டாண்மை யாக்கோபு, அம்பாத்துரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, சிலுவைகளை சேதப்படுத்திய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் ஏ.வெள்ளோடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story