தூய்மை பணியாளர்களின் பிரச்சினைகளை அறிய நீதிபதி தலைமையில் குழு; தேசிய ஆணையக்குழு தலைவர் வலியுறுத்தல்


தூய்மை பணியாளர்களின் பிரச்சினைகளை அறிய நீதிபதி தலைமையில் குழு; தேசிய ஆணையக்குழு தலைவர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 July 2021 10:14 PM IST (Updated: 13 July 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்களின் பிரச்சினைகளை அறிய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று தேசிய ஆணையக்குழு தலைவர் வெங்கடேசன் வலியுறுத்தினார்.

திண்டுக்கல்:
தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்களின் பிரச்சினைகளை அறிய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று தேசிய ஆணையக்குழு தலைவர் வெங்கடேசன் வலியுறுத்தினார்.
தூய்மை பணியாளர்களிடம் குறைகேட்பு 
தேசிய தூய்மை பணியாளர் ஆணையக்குழு சார்பில் குறைகேட்பு கூட்டம், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு ஆணையக்குழு தலைவர் எம்.வெங்கடேசன் தலைமை தாங்கினார்.‌ இதில் கலெக்டர் விசாகன், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஆணையக்குழு தலைவர் எம்.வெங்கடேசன், தூய்மை பணியாளர்களிடம் குறைகளை கேட்டார். அதில் தினமும் 8 மணி நேரத்துக்கு மேல் வேலை வழங்கப்படுகிறதா, சம்பளம் மற்றும் வாரவிடுப்பு முறையாக வழங்கப்படுகிறதா?, பெண் பணியாளர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா? என்று அவர் கேட்டறிந்தார்.
வீட்டுமனை பட்டா
அப்போது ஒப்பந்த பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை, வருங்கால வைப்புநிதிக்கு பிடித்தம் செய்த தொகையை செலுத்துதல், துப்புரவு பணிக்கு புதிய வாகனங்கள், வீட்டு மனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் தூய்மை பணியாளர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டன.
இதையடுத்து தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஆணையக்குழு தலைவர் அறிவுறுத்தினார். மேலும் தூய்மை பணியாளர்கள் அனைவரையும் காப்பீடு திட்டத்தில் சேர்க்கும்படி வலியுறுத்தினார்.
நீதிபதி தலைமையில் குழு 
இதையடுத்து ஆணையக்குழு தலைவர் எம்.வெங்கடேசன் நிருபர்களிடம் கூறுகையில், தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டதாக புகார் வந்துள்ளது. அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உறுதிஅளித்துள்ளார். மேலும் 8 மணி நேர வேலை, ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்தல் ஆகியவற்றை அனைத்து மாநில அரசுகளிடமும் வலியுறுத்துகிறோம்.
அதேபோல் தமிழக முதல்-அமைச்சரையும் சந்தித்து பேச இருக்கிறேன். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்தாலே 80 சதவீத பிரச்சினை தீர்ந்து விடும். இதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து ஒப்பந்த பணியாளர்களின் பிரச்சினைகளை ஆராய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டு கொள்கிறேன், என்றார்.

Next Story