விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மீண்டும் நடைபாதை ஆக்கிரமிப்பு
கலெக்டர் கூறியும் பெயரளவிற்கு மட்டுமே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மீண்டும் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.
விழுப்புரம்,
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் பொதுமக்கள், நடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர். காரணம் பஸ் நிலையத்தில் உள்ள கடை வியாபாரிகள், பயணிகள் நடந்து செல்லும் நடைபாதையை ஆக்கிரமித்து கடையை விரித்தபடி வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு எத்தனையோ முறை புகார்கள் சென்றாலும் நகராட்சி அதிகாரிகள், பெயரளவுக்கு மட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும், அவர்கள் சென்ற சில மணி நேரங்களிலேயே மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகுவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. ஆக்கிரமிப்பை அகற்றும் அதிகாரிகள் மீண்டும் அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் உருவாகியுள்ளதா என்பதை அவ்வப்போது கண்காணிப்பதில்லை. இவ்வாறு ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை என்பது வெறும் கண் துடைப்பாகவே இருந்து வருகிறது.
மீண்டும் உருவானது
விழுப்புரம் மாவட்ட புதிய கலெக்டராக பொறுப்பேற்ற டி.மோகன், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு புதிய பஸ் நிலையத்தை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் நகராட்சி அதிகாரிகள் வழக்கம்போல் வெறும் பெயரளவுக்கு மட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு சென்றனர். அதன் பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்தை நகராட்சி அதிகாரிகள் கண்காணிக்கவில்லை.
இதன் விளைவு தற்போது மீண்டும் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபாதை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் கண்துடைப்புக்காக அகற்றிவிட்டு சென்ற மறுநாளில் இருந்தே மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகி விட்டதாக பஸ் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகள் காரணமாக பயணிகளுக்கும், கடை ஊழியர்களுக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்படுகிறது.
கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
மேலும் நடைபாதை ஆக்கிரமிப்பினால் பயணிகள் நடந்து செல்வதற்கு மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட கலெக்டர், இதில் உடனடியாக தலையிட்டு விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் பாரபட்சமின்றி அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமின்றி மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகாமல் இருக்க நகராட்சி அதிகாரிகள் தினந்தோறும் கண்காணிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story