பாகுபலி காட்டு யானை மீது சரமாரியாக பட்டாசுகள் வீச்சு


பாகுபலி காட்டு யானை மீது சரமாரியாக பட்டாசுகள் வீச்சு
x
தினத்தந்தி 13 July 2021 11:48 PM IST (Updated: 13 July 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையத்தில் ஊருக்குள் புகுந்த பாகுபலி காட்டு யானை மீது வனத்துறையினர் சரமாரியாக பட்டாசுகளை வீசினார்கள். இதனால் வெப்பத்தை தாங்க முடியாமல் பிளிறியபடி அந்த யானை ஓடியது.

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையத்தில் ஊருக்குள் புகுந்த பாகுபலி காட்டு யானை மீது வனத்துறையினர் சரமாரியாக பட்டாசுகளை வீசினார்கள். இதனால் வெப்பத்தை தாங்க முடியாமல் பிளிறியபடி அந்த யானை ஓடியது. 

பாகுபலி காட்டு யானை 

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் தனியாக ஒரு காட்டு யானை சுற்றி வருகிறது. அதற்கு பாகுபலி என்று அழைக்கப்பட்டு வருகிறது. அந்த காட்டு யானை மலையடிவார பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருவதால், அதை பிடித்து ரேடியோ காலர் பொருத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக டாப்சிலிப் முகாமில் இருந்து 3 கும்கிகள் மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டன. வனத்துறையை சேர்ந்த கால்நடைத்துறையினர் துப்பாக்கி மூலம் மயங்க ஊசி செலுத்தியபோது பாகுபலி யானை தப்பி வனப்பகுதிக்குள் ஓடியது. 

சரமாரியாக பட்டாசுகள் வீச்சு 

இதையடுத்து தற்காலிகமாக அந்த யானையை பிடிக்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் பாகுபலி யானை மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையை கடந்து நெல்லிமலை வனப்பகுதியை நோக்கி சென்றதை வனத்துறையினர் பார்த்தனர். 

இதையடுத்து அந்த யானையை வனப்பகுதிக்குள் துரத்தும் பணியில் ஈடுபட்டனர். வனத்துறையினர் ஒன்று, இரண்டு பட்டாசுகளை வெடித்து காட்டு யானைகளை துரத்துவது உண்டு. 

ஆனால் தற்போது வனத்துறையினர் அதகளவில் பட்டாசுகளை சரமாரியாக பாகுபலி காட்டு யானை மீது வீசி வெடித்ததாக கூறப்படுகிறது.

பிளிறியபடி ஓடியது 

இதனால் அந்த வெப்பம் தாங்க முடியாமல் அந்த யானை மிகவும் சத்தமாக பிளிறியபடி வனப்பகுதிக்குள் ஓடியது. இந்த காட்சியை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. 

எனவே இதுபோன்ற இந்த காட்டு யானையை வனத்துறையினர் துரத்துவதை நிறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து மேலும் அவர்கள் கூறும்போது, ஏற்கனவே கூடலூர் அருகே தீயை கொளுத்தி யானை மீது போட்டதில் அந்த யானை இறந்தது. 

ஆனால் இங்கு அதிக பட்டாசுகளை ஒரே நேரத்தில் வெடித்து பாகுபலி யானை மீது வீசுவதால், கண்டிப்பாக அதற்கு தீக்காயம் ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த செயலை வனத்துறையினர் தவிர்க்க வேண்டும் என்றனர். 


Next Story