கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
காவேரிப்பாக்கம்
தனியார் நிறுவன ஊழியர்
காவேரிப்பாக்கம் தேப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மகன் தினேஷ் (வயது 19). தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது உறவினர் கோபி (18). இவர்கள் இருவரும் கடந்த 10-ந் தேதி நெமிலி பகுதியில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டனர்.
பின்னர் அன்று இரவு இருவரும் மோட்டார் சைக்கிளில் காவேரிப்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஓச்சேரி அடுத்த நங்கமங்கலம் அருகே அரக்கோணம் நெடுஞ்சாலையில் வந்தபோது, மோட்டார்சைக்கிளில் வந்த 3 நபர்கள் உதவி கேட்பதுபோல் தினேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர்.
கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி
மோட்டார்சைக்கிளை நிறுத்தியதும் மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை கழுத்தில் வைத்து கேட்பதை கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். பின்னர் தினேஷ், கோபி ஆகிய இருவரிடமிருந்து 2 செல்போன்கள் மற்றும் ரூ.500 ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்தி தினேஷ் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் போலீசார் காவேரிப்பாக்கம் அடுத்த பன்னியூர் கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
2 பேர் கைது
அப்போது அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த அரக்கோணம் அடுத்த கும்மினிப்பேட்டை அருந்ததிபாளையம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (22), பனப்பாக்கம் பெரிய தெருவைச் சேர்ந்த பிரசாந்த் (22) ஆகிய இருவரையும் நிறுத்தி விசாரணை நடத்தியதில் அவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்து செல்போன், மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர். இவர்களது நண்பர் காஞ்சீபுரம் மாவட்டம் பள்ளப்பாக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜசேகர் (25) என்பவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story