தண்ணீர் கேட்பதுபோல் நடித்து விவசாயி வீட்டில் 7½ பவுன் தங்கச்சங்கிலி கொள்ளை
தண்ணீர் கேட்பதுபோல் நடித்து விவசாயி வீட்டில் 7½ பவுன் தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கராஜ். விவசாயியான இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் தன்னுடைய 7½ பவுன் தங்கச் சங்கிலியை அடகு வைத்திருந்தார். நேற்று அந்த தங்கச்சங்கிலியை மீட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு வந்தார். அப்போது அவரை சில மர்ம நபர்கள் நோட்டமிட்டனர்.இந்நிலையில் நாட்டார் மங்கலத்தில் இருந்து ஈச்சங்காடு செல்லும் சாலையில் விவசாய நிலத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்த ரெங்கராஜ், தங்கச்சங்கிலி இருந்த பையை வீட்டில் உள்ள ஆணியில் மாட்டினார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.இதையடுத்து ரெங்கராஜ், தண்ணீர் எடுக்க வீட்டுக்குள் சென்றபோது, தங்கச்சங்கிலியை பையை கொள்ளையடித்துக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story