நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் கோவேக்சின் தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம்
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் கோவேக்சின் தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், கலெக்டர் அலுவலகம் என 84 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது தடுப்பூசி குறித்து போதிய அளவு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அதிகமாக திரண்டு வந்து தடுப்பூசி போடுகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. கோவேக்சின் தடுப்பூசி எந்த மையத்திலும் போடப்படவில்லை.
இந்த நிலையில் முதல் தடுப்பூசியாக கோவேக்சின் தடுப்பூசி போட்டவர்கள் 2-வது தவணை தடுப்பூசி போடுவதற்காக ஏராளமாேனார் நேற்று நெல்லை அரசு மருத்துவக்கல்லூரிக்கு வந்தனர். ஆனால் அந்த தடுப்பூசி இல்லாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கோவேக்சின் தடுப்பூசி கடந்த 10 நாட்களாக தட்டுப்பாடாக உள்ளது. இதனால் அந்த தடுப்பூசி 2-வது தவணை போட வேண்டியவர்கள் மேலும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் வெளிநாடு செல்பவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் வந்து கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு சென்றனர்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை 1,100 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 4 ஆயிரத்து 618 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story