உவரி கடலில் மூழ்கி அண்ணன்-தம்பி சாவு
இறந்த தாயாருக்கு சடங்கு செய்ய வந்தபோது உவரி கடலில் மூழ்கி அண்ணன்-தம்பி பரிதாபமாக இறந்தனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள துைர குடியிருப்பு கீழுர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன் அருள். இவரது மனைவி ரெனிஷ். இவர்களுக்கு அக்னஸ் ராய் (வயது 18), பிரவீன் ராய் (16) ஆகிய மகன்கள் உண்டு. அக்னஸ் ராய் என்ஜினீயரிங் கல்லூரியிலும், பிரவீன் ராய் பாலிடெக்னிக் கல்லூரியிலும் படித்து வந்தனர். ஜான்சன் அருள் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ரெனிசுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜான்சன் அருள் சொந்த ஊருக்கு வந்தார்.
இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி ரெனிஷ் இறந்து விட்டார். இதையடுத்து அவருக்கு சடங்கு செய்வதற்காக ஜான்சன் அருள் தனது மகன்கள், உறவினர்களுடன் உவரி அந்தோணியார் ஆலயத்திற்கு வந்தனர். அங்கு நேற்று அக்னஸ் ராய், பிரவீன் ராய் ஆகியோர் மொட்டை அடித்து விட்டு கடலில் குளிக்க சென்றனர். குளித்துக் கொண்டு இருக்கும்போது அவர்கள் தடை செய்யப்பட்ட ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது, திடீரென்று கடலில் எழுந்த ராட்சத அலையில் அவர்கள் சிக்கினர். இதில் மூச்சுத்திணறிய அக்னஸ் ராய், பிரவீன் ராய் ஆகியோர் தண்ணீரில் மூழ்கினர். இதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர்.
அங்கு இருந்த சில மீனவர்கள் கடலில் குதித்து அக்னஸ் ராய், பிரவின் ராய் ஆகியோரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் 2 பேரையும் திசையன்விளையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அக்னஸ் ராயும், பிரவீன் ராயும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர்களின் உடல்களை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கூடங்குளம் கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கூடங்குளம் கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் நவீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். உவரி கடலில் மூழ்கி அண்ணன்-தம்பி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story