நான் என்ன பேசினாலும் அரசியல் சாயம் பூசுகிறார்கள்; நடிகை சுமலதா எம்.பி. வருத்தம்


சுமலதா எம்.பி.
x
சுமலதா எம்.பி.
தினத்தந்தி 13 July 2021 8:21 PM GMT (Updated: 13 July 2021 8:21 PM GMT)

நான் என்ன பேசினாலும் அரசியல் சாயம் பூசுகிறார்கள் என்று நடிகை சுமலதா எம்.பி. வருத்தத்துடன் கூறினார்.

பெங்களூரு: நான் என்ன பேசினாலும் அரசியல் சாயம் பூசுகிறார்கள் என்று நடிகை சுமலதா எம்.பி. வருத்தத்துடன் கூறினார்.

விவசாயிகள் ஆதங்கம்

மண்டியா மாவட்டத்தில் சட்டவிரோத கல் குவாரிகள் தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமிக்கும், நடிகை சுமலதா எம்.பி.க்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து நடிகை சுமலதா எம்.பி. மண்டியாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் இந்த மண்ணின் மருமகள். மற்றவர்களை காட்டிலும்  எனக்கு இங்கு எல்லா அதிகாரமும் உள்ளது. நான் தவறு செய்திருந்தால் அதை திருத்திக்கொள்ள தயார். நான் வேண்டாம் என்று மக்கள் விரும்பினால் அவர்களிடம் இருந்து விடைபெற்று செல்வேன். சட்டவிரோத கல் குவாரிகளால் கே.ஆர்.எஸ். அணையில் விரிசல் ஏற்படும் நிலை உள்ளதாக நான் கூறினேன். இதனால் விவசாயிகள் ஆதங்கத்தில் இருப்பதாக ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் சொல்கிறார்கள்.

அரசியல் சாயம்

பேச்சுக்கு பேச்சு மண்டியா மக்கள் அப்பாவிகள் என்று சிலர் கூறுகிறார்கள். இந்த மக்களை அவர்கள் எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலமா?. நான் என்ன பேசினாலும் அதற்கு அரசியல் சாயம் பூசுகிறார்கள். இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. எனக்கு அரசியல் புதியது. அதே போல் ஊழல் புகாரை கேட்பதும் புதிதாகவே உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் நான் பிரசாரம் செய்தபோது, சட்டவிரோத கல் குவாரிகள் குறித்து குரல் எழுப்ப வேண்டும் என்று விவசாயிகள் என்னிடம் கூறினர். காவிரி நீர் பிரச்சினை குறித்து நான் நாடாளுமன்றத்தில் பேசினேன். மைசுகர் சர்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-மந்திரியிடம் நான் பலமுறை கூறினேன். இதை தனியாருக்கு வழங்க வேண்டும் என்று நான் கூறவில்லை.
இவ்வாறு சுமலதா கூறினார்.

Next Story