கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்களிடம் ஆர்வம் குறைவு
பல்வேறு காரணங்களால் கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்களிடம் ஆர்வம் குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு: பல்வேறு காரணங்களால் கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்களிடம் ஆர்வம் குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆர்வம் குறைவு
கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலையில் பாதிப்பும், பலியும் அதிகமாக இருந்தது. தற்போது உயிரிழப்பு, வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க கர்நாடக அரசு கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகிறது. கர்நாடகத்தில் 6 முதல் 6½ கோடி மக்கள் வசித்து வருகின்றனர்.
ஆனால் இதுவரை 2 கோடியே 58 லட்சத்து 30 ஆயிரத்து 507 பேர் தான் 2 டோஸ் தடுப்பூசிகளும் போட்டு உள்ளனர். மேலும் கடந்த சில தினங்களாக பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆர்வமும் குறைந்து உள்ளது. இதற்கு முதல் மற்றும் இரண்டாம் தடுப்பூசி செலுத்தி கொள்ள நிர்ணயிக்கப்பட்ட நாட்களே காரணம் என்று கூறப்படுகிறது.
16 வாரங்கள் காத்திருக்க....
அதாவது முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள 12 முதல் 16 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் 2-வது டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுவது இல்லை. மேலும் தடுப்பூசி தட்டுப்பாடு, நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளிட்ட காரணங்களாலும் பொதுமக்கள் தடுப்பூசி போட்டு கொள்ள தயக்கம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 2 கோடியே 10 லட்சத்து 49 ஆயிரத்து 368 பேர் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர். ஆனால் 2-வது டோஸ் தடுப்பூசியை 47 லட்சத்து 81 ஆயிரத்து 139 பேர் செலுத்தி கொண்டு உள்ளனர். ஒட்டுமொத்தமாக 2 டோஸ்களையும் 2 கோடியே 58 லட்சத்து 30 ஆயிரத்து 507 பேர் தான் செலுத்தி உள்ளனர். மக்கள் தொகையில் பாதி பேர் கூட தடுப்பூசி செலுத்தப்படவில்லை.
பெங்களூரு நகரில் 18 சதவீதம் பேர்
அதிகபட்சமாக உடுப்பியில் 34.5 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி உள்ளனர். கதக்கில் 28.9 சதவீதம் பேரும், பாகல்கோட்டையில் 27.6 சதவீதம் பேரும், தட்சிண கன்னடாவில் 26.6 சதவீதம் பேரும், சிக்கமகளூருவில் 26.5 சதவீதம் பேரும், ராமநகரில் 25.9 சதவீதம் பேரும், சித்ரதுர்காவில் 24.7 சதவீதம் பேரும் 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி உள்ளனர்.
குறைந்தபட்சமாக பெங்களூரு நகரில் 18 சதவீதம், பெங்களூரு புறநகர், தாவணகெரேயில் 19.8 சதவீதம் பேர், துமகூரு, ஹாவேரியில் 20.1 சதவீதம், பெலகாவியில் 20.3 சதவீதம், சாம்ராஜ்நகர், கலபுரகியில் 20.5 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story