பொதுமக்கள் முன்எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் கொரோனா 3-வது அலை வரும்; சுதாகர் எச்சரிக்கை


மந்திரி சுதாகர்.
x
மந்திரி சுதாகர்.
தினத்தந்தி 14 July 2021 2:28 AM IST (Updated: 14 July 2021 2:28 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் முன்எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் கொரோனா 3-வது அலையை நாமே வரவேற்பது போல் ஆகிவிடும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.

பெங்களூரு:கர்நாடகத்தில் முன்எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் கொரோனா 3-வது அலையை நாமே வரவேற்பது போல் ஆகிவிடும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஆபத்து ஏற்படுவது உறுதி

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை தவிர்க்கக்கூடாது. அதிக எண்ணிக்கையில் ஒரு இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும். கொரோனா 2-வது அலை முடிந்துவிட்டது என்று மக்கள் நினைக்கிறார்கள். மார்க்கெட்டுகள், ஆன்மிக தலங்கள், வணிக வளாகங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்கள் தனிமனித இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

தங்களின் உடல் ஆரோக்கியம் தங்கள் கையில் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மாநில அரசு சில காரணங்களினால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தியுள்ளது. அதனால் கொரோனா நம்மை விட்டு போய்விட்டது என்று யாரும் கருத வேண்டாம். பொதுமக்கள் முன்எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் ஆபத்து ஏற்படுவது உறுதி. அதாவது நாமே கொரோனா 3-வது அலையை வரவேற்பது போல் ஆகிவிடும்.

முன்எச்சரிக்கை நடவடிக்கைகள்

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 1.5 சதவீதமாக உள்ளது. இந்த பாதிப்பு பூஜ்ஜியத்திற்கு வந்தால் மட்டுமே கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது என்று அர்த்தம். கர்நாடகத்தில் தினமும் சுமார் 1,500 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலையை தடுப்பது மக்களின் கையில் தான் உள்ளது. பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளாவிட்டால் அரசு சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
கொரோனா 3-வது அலை வரும் என்று உறுதியாக கூற முடியாது. 

ஆனால் சில முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் அதை சரியான முறையில் கையாள முடியும். தேவை உள்ளவர்கள் மட்டும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். மற்றவர்கள் இன்னும் 4, 5 மாதங்கள் வீட்டுக்கு உள்ளேயே இருக்க வேண்டும். மாநிலத்தில் குறைந்தது 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். தற்போது 2½ கோடி பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

இரவு நேர ஊரடங்கு

மராட்டியம், கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வரவில்லை. அதனால் அந்த மாநிலங்களின் எல்லை பகுதியில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கை ரத்து செய்வது, கேளிக்கை விடுதிகளை திறப்பது குறித்து முதல்-மந்திரி ஆலோசித்து முடிவு செய்வார்.
இவ்வாறு சுதாகர் கூறினார்.

Next Story