ராகி உருண்டை சாப்பிட்ட ஒரே குடும்பத்தினர் 3 பேர் சாவு


ராகி உருண்டை சாப்பிட்ட ஒரே குடும்பத்தினர் 3 பேர் சாவு
x
தினத்தந்தி 14 July 2021 2:44 AM IST (Updated: 14 July 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

சித்ரதுர்காவில் ராகி உருண்டை சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். அவர்கள் சாப்பிட்ட ராகி உருண்டையில் விஷம் கலக்கப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிக்கமகளூரு: சித்ரதுர்காவில் ராகி உருண்டை சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். அவர்கள் சாப்பிட்ட ராகி உருண்டையில் விஷம் கலக்கப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

ராகி உருண்டை சாப்பிட்டனர்

சித்ரதுர்கா தாலுகா லம்பானிஹட்டி கிராத்தை சேர்ந்தவர் திப்பாநாயக் (வயது 45). இவரது மனைவி சுதாபாய் (40). இந்த தம்பதியின் மகன் ராகுல் (19), மகள்கள் ரக்‌ஷிதா (17), ரம்யா (16). திப்பாநாயக்கின் தாய் குந்திபாய் (85). இவர்கள் 6 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்கள் ராகி உருண்டை தயாரித்து சாப்பிட்டனர். ரக்‌ஷிதாவை தவிர மற்ற 5 பேரும் ராகி உருண்டையை சாப்பிட்டனர். ரக்‌ஷிதா மட்டும் இரவில் சாப்பிடவில்லை. 

இரவு உணவை முடித்ததும் அவர்கள் அனைவரும் தூங்க சென்றனர். இந்த நிலையில் சிறிது நேரத்தில் ராகி உருண்டை சாப்பிட்ட 5 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரக்‌ஷிதா, அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். 

3 பேர் சாவு

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர்கள் 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சுதாபாயும், குந்திபாயும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து திப்பாநாயக், ராகுல், ரம்யா ஆகிய 3 பேரும் சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தாவணகெரே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

தாவணகெரே அரசு  ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே திப்பாநாயக் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ராகுலும், ரம்யாவும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

விஷம் கலக்கப்பட்டதா?

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பரமசாகரா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் போலீசார் பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ராகி உருண்டை சாப்பிட்டுவிட்டு படுத்த 5 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதும், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே 3 பேர் உயிரிழந்ததும் தெரியவந்தது. மேலும் இரவில் ராகி உருண்டை சாப்பிடாததால் ரக்‌ஷிதா, உயிர் தப்பியதும் தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார், திப்பாநாயக் குடும்பத்தினர் இரவில் சாப்பிட்ட ராகி உருண்டையை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். அந்த ராகி உருண்டையில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதிகா, லம்பானிஹட்டி கிராமத்தில் உள்ள திப்பா நாயக் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ராதிகா நிருபர்களிடம் கூறுகையில், ராகி உருண்டை சாப்பிட்ட திப்பாநாயக், அவரது மனைவி சுதாபாய், திப்பாநாயக்கின் தாய் குந்திபாய் ஆகிய 3 பேரும் உயிரிழந்துள்ளனர். திப்பா நாயக்கின் மகன் ராகுல், ரம்யா சிகிச்சை பெற்று வருகிறார்கள். இரவு ராகி உருண்டை சாப்பிடாததால் திப்பா நாயக்கின் மற்றொரு மகள் ரக்‌ஷிதாவுக்கு எதுவும் ஆகவில்லை. 

திப்பாநாயக் குடும்பத்தினர் சாப்பிட்ட ராகி உருண்டையை போலீசார் சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். அந்த ராகி உருண்டையில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இதுதொடர்பாக திப்பா நாயக்கின் 2-வது மகள் ரக்‌ஷிதாவிடமும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார். 

சோகம்

இந்த சம்பவம் குறித்து பரமசாகரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ராகி உருண்டை சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story