சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம்
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சங்கரன்கோவில்:
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடித்தபசு திருவிழா 12 நாட்கள் நடைபெறும். 11-ம் திருநாளில் நடைபெறும் ஆடித்தபசு காட்சி அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள். கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக ஆடித்தபசு திருவிழா நடைபெறவில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலையில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிப்பட்டம் உள் பிரகாரம் சுற்றி வந்ததும் கோமதி அம்பாள் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் காலை 6.20 மணிக்கு கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமர பீடம் தர்ப்பைப்புல், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கோவில் உள்ளே நடக்கிறது. அன்று பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story