தொப்பூர் கணவாயில் கார் தலைக்குப்புற கவிழ்ந்தது டிரைவர் உள்பட 3 பேர் காயம்


தொப்பூர் கணவாயில் கார் தலைக்குப்புற கவிழ்ந்தது டிரைவர் உள்பட 3 பேர் காயம்
x
தினத்தந்தி 14 July 2021 9:57 PM IST (Updated: 14 July 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

தொப்பூர் கணவாயில் கார் தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

நல்லம்பள்ளி:
தொப்பூர் கணவாயில் கார் தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
கார் கவிழ்ந்தது
தஞ்சாவூர் டவுன் பகுதியை சேர்ந்தவர்கள் நளினிம்மா (வயது 60), லயோலா (45). திருநங்கைகளான இவர்கள் 2 பேரும் கிருஷ்ணகிரிக்கு காரில் வந்து விட்டு மீண்டும் தஞ்சாவூருக்கு புறப்பட்டனர். இந்த காரை டிரைவர் பிரவீன் (24) என்பவர் ஓட்டி வந்தார். 
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் அருகே கார் வந்தபோது, கணவாய் பகுதியில் மழை பெய்தது. அப்போது கால்நடை ஒன்று சாலையை கடக்க முயன்றது. கால்நடை மீது மோதாமல் இருக்க டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். மழை பெய்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உள்பட 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தனர். 
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து விபத்தில் சிக்கி தவித்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு திருநங்கைகள் 2 பேரும் முதலுதவி பெற்று கொண்டு வேறு காரில் தஞ்சாவூருக்கு சென்றனர். டிரைவர் பிரவீன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து காரணமாக தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story