வத்தலக்குண்டு அருகே பூசாரிக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய கிராம மக்கள்
வத்தலக்குண்டு அருகே பூசாரிக்கு கோவில் கட்டி கிராம மக்கள் கும்பாபிஷேகம் நடத்தினர்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே லட்சுமிபுரத்தில் கலியுக சிதம்பரேசுவரர் கோவில் உள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில், பூசாரியாக சிதம்பரம் என்பவர் இருந்தார். மேலும் அவர் வசித்த கிராமம், அவரை அடையாளப்படுத்தும் வகையில் பூசாரிபட்டி என்று அழைக்கப்பட்டது.
சிதம்பரம் மறைவுக்கு பின்னர், அவரது மகன் நடராஜன் கோவில் பூசாரி ஆனார். அவர் வாழ்நாள் முழுவதும் கலியுக சிதம்பரேசுவரர் கோவிலுக்காகவே தன்னை அர்ப்பணித்தார். மேலும் பூசாரிபட்டி கிராம மக்களுக்கு பல்வேறு சேவைகளையும் அவர் செய்தார். இதற்கிடையே கடந்த ஆண்டு ஜூலை 14-ந்தேதி நடராஜன் மரணம் அடைந்தார். அன்றைய தினம் பூசாரிபட்டி கிராம மக்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினர். இந்தநிலையில் பூசாரி நடராஜன் நினைவாக அவருக்கு கோவில் கட்ட கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, பூசாரியின் சமாதி அருகே நடராஜன்சுவாமி திருவரசு என்ற பெயரில் கோவிலை கட்டினர்.
இந்தநிலையில் பூசாரி நடராஜனின் நினைவு நாளான அவருக்காக கட்டப்பட்ட நடராஜன்சுவாமி திருவரசு கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திருப்பரங்குன்றம் வெங்கடேஷ் பட்டாச்சாரியார், திருச்சி பார்த்தசாரதி பட்டர் ஆகியோர் கலந்துகொண்டு கோவில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
இதில் பூசாரிபட்டி கிராம மக்கள் அனைவரும் கலந்துகொண்டு வழிபட்டனர். அப்போது அவர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கலியுக சிதம்பரேசுவரர் கோவில் பூசாரியும், கூட்டுறவு வீடு கட்டும் சங்க தலைவருமான சுந்தர் மற்றும் விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story